புதுடெல்லி, மார்ச் 18–
நாட்டில் 49.82 லட்சம் பதிவு செய்யப்பட்ட பீடித் தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் நல்வாழ்வுத் திட்டம் , பீடித் தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக நாடு முழுவதும் 18 மண்டலங்களில் அமைந்துள்ள தொழிலாளர் நல அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தொழிலாளர் நல்வாழ்வுத் திட்டத்தில் சுகாதாரம், கல்வி உதவித்தொகை மற்றும் வீட்டுவசதி என மூன்று அம்சங்கள் உள்ளன.
*10 மருத்துவமனைகள் மற்றும் 279 மருந்தகங்கள் மூலம் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புற்றுநோய், காசநோய், இதய நோய்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான செலவினத்தை திரும்பப் பெறுதல்.
* பீடித் தொழிலாளர்களின் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி / பல்கலைக்கழகம் வரை கல்வி கற்க ஆண்டுக்கு ரூ.1000/- முதல் ரூ.25,000/- வரை, வகுப்பு / பாடப்பிரிவுக்கு ஏற்ப கல்வி உதவித் தொகை.
* திருத்தியமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வீட்டுவசதித் திட்டம் 2016-ன் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ரூ.1,50,000/- (ஒரு பயனாளிக்கு) மானியம்.
பீடித் தொழிலாளர்கள் உட்பட அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரே நாடு ஒரே அட்டை மூலம் பொது விநியோகத் திட்டம், தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம், பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி, பிரதமரின் செல்வமகள் சேமிப்பு நிதி திட்டம், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன என்று மக்களவையில் நேற்று மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே தெரிவித்தார்.