காசா:
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 580 நாட்களுக்கும் மேலாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் ராணுவ வீரரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வந்தது. இஸ்ரேலுக்குள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், நூற்றுக்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து இஸ்ரேல் காசா மீதான படையெடுப்பை தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க அரசு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த ஜன.,19ம் தேதி இரு தரப்பினரிடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன் ஒரு பகுதியாக, இருதரப்பிலும் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, படிப்படியாக பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அந்த வகையில், ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரும், அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவருமான ஈடன் அலெக்ஸாண்டர், 21, என்பவரை 580 நாட்களுக்குப் பிறகு விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா,கத்தார், எகிப்து மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்ற 4 முனை பேச்சுவார்த்தைக்கு பிறகு அலெக்ஸாண்டரை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக அவர் நாளை மீண்டும் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்படலாம்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வாஷிங்டன் சிறப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இது ஒரு நேர்மறையான முன்னேற்றமாகும். மேலும் ஹமாஸ் வசம் உள்ள 4 அமெரிக்கர்களின் உடல்களை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்,’ என தெரிவித்தார்.