வாஷிங்டன், மார்ச் 8
அமெரிக்கா மீதான வரிகளை குறைக்க இந்தியா சம்மதித்துள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மீது இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகள் அதிக வரி விதிக்கிறது என்றும் இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2-ந்தேதி முதல் தொடங்கும் என்று சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் அமெரிக்கா மீதான வரிகளை குறைக்க இந்தியா சம்மதித்துள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்காவின் தொழில்துறை செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் உடன் இன்று வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் டொனால்ட் டிரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இந்தியா எங்களிடம் மிகப்பெரிய அளவில் வரிகளை வசூலிக்கிறது. இதனால் இந்தியாவில் எந்த பொருட்களையும் விற்க முடியாத சூழல் உள்ளது. தற்போது இந்தியா தனது வரிகளை குறைத்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.
இதன்மூலம் அவர்கள் என்ன செய்தார்களோ அதை அம்பலப்படுத்தி உள்ளனர். பதிலுக்கு பதில் வரி விதிப்பதாக கூறிய நிலையில் இந்தியா வரிகளை குறைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.
கனடா நாடு அமெரிக்காவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் வரை வரி விதிக்கிறது. இதை ஏற்கவே முடியாது. யாரும் அதனை பேசவே இல்லை. இனி இதுபோல் நடக்கவே கூடாது. கனடா வரிகளைக் குறைக்காவிட்டால் அவர்கள் குறைக்கும் வரை நாங்கள் அதே அளவிலான வரிகளை விதிக்க வுள்ளோம். வருகிற திங்கள் அல்லது செவ்வாய் வரை காத்திருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.