புதுடெல்லி, மார்ச் 20–
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை மாற்றும் எந்த திட்டமும் இல்லை என்று பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அவர் அளித்த பதில்:
அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை. அதேபோல், ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலியிடங்களை நீக்குவதற்கான கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை. ஓய்வூதிய வயதில் மாற்றங்களை ஏற்படுத்தும்படி ஊழியர்கள் தரப்பிலிருந்து முறையான கோரிக்கை எதுவும் பெறப்படவில்லை.
இவ்வாறு அமைச்சர் கூறிஉள்ளார்.
அரசுஊழியர்களின் ஓய்வு வயது தற்போது 60 ஆக உள்ளது.அதை ஏப்ரல் 1 ம் தேதி முதல் 62 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சரின் பதில் அமைந்துள்ளது.