tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை

அறிவோம் அபிராமி அந்தாதியை

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த

 

அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்

 

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே

 

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

 

மணியே - மாணிக்க மணியே!

 

மணியின் ஒளியே - அம்மாணிக்க மணியின் ஒளியே!

 

ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி வீசும் அந்த மாணிக்கங்கள் இழைத்த அணிகலனே!

 

அணியும் அணிக்கு அழகே - அணியும் அந்த அணிகலனுக்கு அழகாகத் திகழ்பவளே!

 

அணுகாதவர்க்குப் பிணியே - நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!

 

பிணிக்கு மருந்தே - உன்னை வணங்குபவர்களுக்கு அவரவர் வினைப்பயனால் ஏற்படும் பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகி நிற்பவளே!

 

அமரர் பெருவிருந்தே - அமரர்கள் என்றும் வணங்கி ஏத்தி மகிழும் படி அமைந்தவளே!

 

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - உன் திருமலர்ப் பாதங்களைப் பணிந்த பின் வேறெந்த உலக இன்பத்தையும் வேண்டி நில்லேன்.

 

மாணிக்கத்தை போன்ற பிரகாசிக்கும் நிறம் உடையவளே, அணியும் அணிகலன்களுக்கு அழகு சேர்ப்பவளே. உன்னை அணுகி வணங்காதவர்களுக்கு பிணியே. (அம்பிகையே வணங்காதவர்களுக்கு பிணி வருமா என்று கேட்டால், இந்த வார்த்தையின் அழகை நாம் கவனிக்க வேண்டும்.  

 

*பிணி, நோய் இரண்டும் ஒரே பொருளைத் தருவது போல் இருந்தாலும், நோய் அவ்வப்போது வந்து செல்வது உண்டு. ஜுரம், இருமல், வலி போன்றவை வந்தாலும் அதற்கான மருந்தை எடுத்துக் கொண்டால் அத்துடன் அது சென்றுவிடும். ஆனால், பிணி என்பது தொடர்ந்து வருவது. அந்த நேரத்தில் சரியானது போல தோன்றும். ஆனால், மீண்டும் நம்மை வந்து வருத்தும். பசிப்பிணி மற்றும் பிறவி பிணி. பசிக்கு அப்போது உணவு அருந்தினால் அந்த பசியானது தீர்க்கப்படும். ஆனால், மீண்டும் பசிக்கும். இந்த வகை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். அதுபோல, பிறவிப் பிணியானது இந்த பிறவியில் முடிந்தாலும், அடுத்த பிறவி எடுத்து அதில் ஆன்மா வருந்தக்கூடிய நிலை ஏற்படும்.*

 

ஆகையால், இங்கே அம்பாள் பிறவிப்பினியை தீர்க்கக் கூடியவள் என்று பொருள் கொள்ள வேண்டும். தேவர்களுக்கு பெருவிருந்தாக, அதாவது, அமிர்தமாக இருக்கக்கூடியவளே. உன்னை பணிந்த பின்பு மற்றவரை பணியேன். இறைவியைப் பற்றி பாடிய நான் மனிதர்களை புகழ்ந்து பாட மாட்டேன்.

 

அன்னையின் ரூப அழகு கண்ணுக்கு விருந்தாகவும், மதுர வசனம் செவிக்கு விருந்தாகவும், அவளது அருள் மனதிற்கு விருந்தாகவும், பரிமளம் நாசிக்கு விருந்தாகவும் அமைகின்றது.

 

(தொடரும் / வளரும்) 

சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை