ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்ததும்
காத்தும் அழித்தும் திரிபவராம்; கமழ் பூக் கடம்பு
சாத்தும் குழல் அணங்கே! மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கும் புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே!
ஏத்தும் அடியவர் = உன்னைப் போற்றி வணங்கும் அடியவர்களாக
ஈரேழ் உலகினையும் படைத்ததும்
காத்தும் அழித்தும் = பதினான்கு உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும்
திரிபவராம் = உலவ கூடியவர்களாகிய
கமழ் பூக் கடம்பு = வாசனை வீசக்கூடிய கடம்ப மலரை
சாத்தும் குழல் அணங்கே! = கூந்தலில் அணிந்து கொள்ளக்கூடிய அன்னையை
மணம் நாறும் = வாசனை வீசக்கூடிய
நின் தாளிணைக்கு என் = உன்னுடைய இரு தாள்களுக்கு எனது
நாத்தங்கும் = நாவில் உதிக்கும்
புன்மொழி = இனிய சொல்
ஏறியவாறு நகையுடைத்தே! = ஏறிய செயல் சிரிப்புக்கு உடையது.
மணம் கமழும் கடம்ப மலர்களைச் சூடிய கூந்தைலை உடைய அன்னையே! உன்னைப் போற்றும் அடியவர்களாகிய பதினான்கு உலகங்களையும் படைத்ததும், காத்தும், அழித்தும் திரியும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆவர். இப்பேற்பட்ட பரமாத்மாக்கள் உன்னை பூஜித்த போதிலும், மணம் மிகுந்த உன்னிரு திருவடிகளுக்கு, எளிய ஜீவாத்மாவாகிய நான் சாத்தும் புன்மொழிகளால் ஆன பாமாலையையும் (அபிராமி அந்தாதியையும்) நீ ஏற்றுக் கொள்வது எனக்கே நகைப்பைத் தருகின்றதே!
அம்பிகையை வணங்கியவர்களாக கீழ்க்கண்டவர்களை சொல்கிறது லலிதா சகஸ்ரநாமம்.
ஹரிப்ரம்ஹேந்திர ஸேவிதா = விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியோர்களால் சேவிக்கப்பட்டவள்.
மஹா பைரவ பூஜிதா = மஹா பைரவரால் பூஜிக்கப்பட்டவள்
(தொடரும் /வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை