சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
சித்தியும் = சகல சித்திகளும்
சித்தி தரும் தெய்வம் ஆகித் = அந்த சித்திகளை அளிக்கும் தெய்வமும் ஆகி
திகழும் பரா
சக்தியும் = விளங்குகின்ற பராசக்தியாகவும்
சக்தி தழைக்கும் சிவமும் = சக்தி தத்துவம் நிறைந்து விளங்க கூடிய சிவனும்
தவம் முயல்வார்
முத்தியும் = தவம் செய்வார்களுக்கு முற்றியும்
முத்திக்கு வித்தும் = முக்தி கிடைப்பதற்கான விதையாகவும்
வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும் = அந்த விதையிலிருந்து முளைத்து எழக்கூடிய மெய் அருளும் மெய்யறிவும்
புத்தியினுள்ளே புரக்கும் = அந்த அறிவிலே இருந்து பாதுகாக்கும்
புரத்தை அன்றே = திரிபுரங்களில் வாசம் செய்யக்கூடிய அன்னையே.
அணிமா, மகிமா, கரிமா, ப்ராப்தி, பிராகாம்யம், ஈசித்துவம், வசித்துவம் ஆகிய அட்டமாசித்திகளுமாக திகழ்கின்ற அன்னையே. அந்த சித்திகளை தன் அடியவர்களுக்கு உன் துணைவராகிய சிவபெருமானுடன் இருந்து வழங்கக்கூடிய பராசக்தியே. தவம் செய்பவர்களுக்கு முக்தியும், அந்த முக்தியை பெறுவதற்கான மெய்யறிவு என்ற மூலவித்தாகவும், புத்தியையும் அளித்து பாதுகாக்கின்ற திரிபுரசுந்தரியே.
சர்வ மங்களங்களையும் வழங்கும் அன்னை அந்தந்த பொருளாகவும், அந்த பொருளின் ஆற்றலாகவும், அந்த பொருட்களின் பலனாகவும், மூலமாகவும், முடிவாகவும் நிறைந்து விளங்குகிறாள்.
(தொடரும் / வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை