இண்டியன்வெல்ஸ், மார்ச்.18-
இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை சபலென்காவை வீழ்த்தி 17 வயது ஆன்ட்ரீவா சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆண்கள் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஜாக் டிராப்பர் கோப்பையை கைப்பற்றினார்.
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் 13-ம் நிலை வீரரான ஹோல்கர் ருனே (டென்மார்க்), 12-ம் நிலை வீரரான ஜாக் டிராப்பரை (இங்கிலாந்து) சந்தித்தார்.
69 நிமிடம் நடந்த இந்த மோதலில் 23 வயது ஜாக் டிராப்பர் 6 -2, 6 -3 என்ற நேர்செட்டில் ஹோல்கர் ருனேவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். 1,000 தரவரிசை கொண்ட போட்டியில் டிராப்பர் வென்ற முதல் பட்டம் இதுவாகும். இடக்கை ஆட்டக்காரரான டிராப்பர் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதுடன் 10 ஏஸ் சர்வீஸ் போட்டும் மிரட்டினார். அவர் அரைஇறுதியில் 2 முறை சாம்பியனான கார்லஸ் அல்காரசை (ஸ்பெயின்) போட்டுத்தாக்கியது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் கோப்பையை கையில் ஏந்திய ஜாக் டிராப்பர் 1,000 தரவரிசை புள்ளியோடு ரூ.13.50 கோடியையும் பரிசாக அள்ளினார். 2-வது இடம் பெற்ற ஹோல்கர் ருனேவுக்கு ரூ.7 கோடி பரிசாக கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் ஜாக் டிராப்பர் தரவரிசையில் 14-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு ஏற்றம் கண்டுள்ளார். அவர் டாப்-10 இடத்துக்குள் வந்து இருப்பது இதுவே முதல்முறையாகும். ஹோல்கர் ருனே ஒரு இடம் உயர்ந்து 12-வது இடம் பெற்றுள்ளார்.
ஜாக் டிராப்பர் கூறுகையில் ‘இது ஒரு நம்ப முடியாத வெற்றி. மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இந்த வெற்றிக்கு நான் தகுதியானவன் என்று கருதுகிறேன். அந்த அளவுக்கு கடினமான சூழலை கடந்து வந்திருப்பதுடன், நிறைய தியாகங்களையும் செய்து இருக்கிறேன்’ என்றார்.
முன்னதாக நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடம் வகித்த 17 வயது ரஷிய வீராங்கனை மிரா ஆன்ட்ரீவா, நம்பர் ஒன் வீராங்கனையும், 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான 26 வயது அரினா சபலென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா வெற்றி பெற்று வாகை சூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ப அவர் முதல் செட்டை எளிதில் தனதாக்கினார். ஆனால் அதன் பிறகு எழுச்சி கண்ட ஆன்ட்ரீவா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.
2 மணி 4 நிமிடம் நீடித்த இந்த மோதலில் ஆன்ட்ரீவா 2- 6, 6 -4, 6 -3 என்ற செட் கணக்கில் சபலென்காவை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். முன்னதாக அவர் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இகா ஸ்வியாடெக்கை (போலந்து) சாய்த்து இருந்தார். 1,000 தரவரிசை புள்ளியை அளிக்கும் மாஸ்டர்ஸ் போட்டியில் அவர் வென்ற 2-வது பட்டம் இதுவாகும். கடந்த பிப்ரவரி மாதம் துபாய் ஓபன் போட்டியில் மகுடம் சூடி இருந்தார்.
இந்த போட்டி தொடரில் அசத்தியதன் மூலம் ஆன்ட்ரீவா தனது பெயரை சரித்திரத்தில் பதிய வைத்தார்.
சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்த ஆன்ட்ரியாவுக்கு 1,000 தரவரிசை புள்ளியுடன் ரூ.12.50 கோடி பரிசாக கிடைத்தது. தோல்வி அடைந்த சபலென்கா ரூ.6.50 கோடியை பரிசாக பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஆன்ட்ரீவா தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்தார்.
வெற்றிக்கு பிறகு ஆன்ட்ரீவா கூறுகையில், ‘இறுதிவரை போராடியதற்கும், எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், ஒருபோதும் முயற்சியை கைவிடாததற்கும் நான் எனக்கு மீண்டும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். களத்தில் நான் முயல் போல் வேகமாக ஓட முயற்சித்தேன். ஏனெனில் சபலென்காவிடம் இருந்து புல்லட் போன்று ஷாட்கள் வேகமாக வந்தன. அதை தொடர்ந்து சமாளிப்பது கடினமாகவே இருந்தது’ என்றார்.
இண்டியன்வெல்சை தொடர்ந்து அடுத்து மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் இன்று தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.