மகாராஷ்டிராவிலுள்ள பண்டரிபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இங்கு ரகுமாயீ சமேத பாண்டுரங்கனை தரிசிக்கலாம். ஞானானந்த சுவாமிகளின் சீடர் ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்டுள்ளது. யந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள் அனைத்தும் இங்கு இருப்பது விசேஷம். இத்தலத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இறைவனை நாம சங்கீர்த்தனம் (பக்திப்பாடல்) மூலம் வழிபாடு செய்யப்படுகிறது. ஏனெனில், நாம சங்கீர்த்தனம் தான் ஒருவரை இறைவனிடம் அழைத்து செல்கிறது.
கோயில் சிறப்புகள்:
* ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜகன்நாதர் ஆலயம் போன்று இந்த கோயிலின் விமானம் அமைந்துள்ளது
* ஸ்ரீ ரகுமாயிசமேத பாண்டுரங்க சுவாமிகள் 12 அடியில் பிரம்மாண்டமாக இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
* பாண்டுரங்கனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் அன்று பாண்டுரங்கன் 10,008 பழங்களால் குருவாயூரப்பன் அலங்காரம் (விசு கனி) அலங்காரம் செய்யப்பட்டு மிக பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
* கோகுலாஷ்டமி அன்று வேணுகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மற்றும் ஒவ்வொரு நாளும் புன்னை மரக் கண்ணன் அலங்காரம், காளிங்க நர்த்தன அலங்காரம், கோவர்தன கிரி தாரி அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம் இவ்வாறு 7 நாட்களும் , 7 விதமான அலங்காரங்களில் திவ்ய தரிசனம் கொடுக்கிறார்.
* வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5 மணிக்கு உற்சவர் சொர்க்க வாசல் தரிசனம் பக்தர்களுக்கு அருளிகிறார். 12 அடியில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கும் பாண்டுரங்க சுவாமிகள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் திருப்பாற்கடலில் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருளிகிறார்.
* அஷ்டபந்தனம் எனும் மூலிகையால் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
* தல விருக்ஷம் தமால மரம். இந்த மரம் மிகவும் விசேஷமானது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் இம்மரத்தின் கீழ் நின்று புல்லாங்குழல் வாசிப்பார் எனவும், கோபிகைகளும் ராதையும் அதைக் கேட்டு மயங்கியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. வட மாநிலங்களில் மட்டுமே காணப்படும் இந்த விருக்ஷம் தென்னாட்டில் இந்தத் தலத்தில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.
இத்தனை சிறப்பு மிக்க தென்னாங்கூரிலேயே மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் உள்ளது. மதுரை மாநாகரில் எழில்மிகு தோற்றத்துடன் மிக பிரம்மாண்டமாக அமைந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய அருளை அளித்துவரும் மதுரை மீனாட்சியம்மன் இந்த தென்னாங்கூரில் தான் பிறந்தார் என்ற ஐதீகமும் உண்டு. மதுரை மீனாட்சியம்மன் இங்கு பிறந்ததாலேயே இந்த ஊருக்கு தட்ஷிண ஹாலாட்சியம் என்றொரு பெயரும் உண்டு.
நாம சங்கீர்த்தனம் முக்தி அளிக்கும் வல்லமை பெற்றது என்பதால், இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் கலந்த உற்சவமாக நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில், வந்தவாசியிலிருந்து 6 கி.மீ. தூரத் திலும், காஞ்சிபுரத்திலிருந்து 35 கி.மீ. தூரத்திலும் தென் னாங்கூர் அமைந்துள்ளது.
விட்டலா! விட்டலா!! விட்டலா!!!
கீதா ராஜா திருவான்மியூர்