கடற்கொள்ளையர்களை வேட்டையாட ஐஎன்எஸ் சுனைனா கப்பல், கர்நாடகாவின் கார்வாரில் இருந்து நேற்று புறப்பட்டது. இந்த ரோந்து கப்பலின் பயணத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபரில் ஐஎன்எஸ் சுனைனா ரோந்து கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த கப்பல் ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த சூழலில் நட்பு நாடுகளை சேர்ந்த வீரர்களுக்கும் ஐஎன்எஸ் சுனைனா கப்பலில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதன்படி கொமொரோஸ், கென்யா, மடகாஸ்கர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொசாம்பிக், சீஷெல்ஸ், இலங்கை, தான்சானியா ஆகிய 9 நாடுகளை சேர்ந்த 44 வீரர்கள் பயிற்சி பெற்றனர். அவர்களும் ஐஎன்எஸ் சுனைனா ரோந்து கப்பலில் இந்திய கடற்படை வீரர்களுடன் பணியாற்ற உள்ளனர்.
கர்நாடகாவின் கார்வாரில் ஐஎன்எஸ் சுனைனாவின் பயணத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கிவைத்தார்.
முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: சர்வதேச கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய ஐஓஎஸ் சாகர் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஐஎன்எஸ் சுனைனா ரோந்து கப்பல் இந்திய பெருங்கடலில் பாதுகாப்பை உறுதி செய்ய புறப்படுகிறது. பல்வேறு நாடுகளின் இறையாண்மையை சமரசம் செய்யாமல் அவற்றின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை இந்தியா உறுதி செய்கிறது. சரக்கு கப்பல்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும்போது இந்திய போர்க்கப்பல்கள் முதல் அணியாக களத்தில் இறங்குகிறது. இதற்காக இந்திய கடற்படையை மனதார பாராட்டுகிறேன்.
இந்திய சரக்கு கப்பல்கள் மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த கப்பல்களின் பாதுகாப்பையும் நமது கடற்படை உறுதி செய்கிறது. இந்திய பெருங்கடலில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நமது கடற்படை பாதுகாக்கிறது.
இந்தியாவின் முதல் வணிகக் கப்பலான எஸ்.எஸ்.லாயல்டி கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி மும்பையிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் அதே நாளில் ஐஓஎஸ் சாகர் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஐஎன்எஸ் சுனைனா ரோந்து கப்பல் தர்-எஸ்-சலாம், நாகாலா, போர்ட் லூயிஸ் மற்றும் போர்ட் விக்டோரியா ஆகிய இடங்களுக்குச் செல்லும். கப்பலில் உள்ள சர்வதேச குழுவினர் சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.