எழுபது எண்பதுகளில் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் மினிமம் இரண்டு மூன்று முதல் பத்து பன்னிரண்டு பேர் வரை இருந்தனர்.
பள்ளி விடுமுறை நாட்களில் தெரு முழுவதும் விளையாடுவார்கள். எந்த பயமும் இல்லை.
விதவிதமான விளையாட்டுக்கள். சூரியனோடு சேர்ந்து உதித்தது முதல் மறையும் வரை விளையாடுவர்.
அதன் பின்னும் பாலக்கரை, மரத்தடி, வாசல் தின்னையில் அமர்ந்து படம் பெயர் விளையாடுவதும் உண்டு.
இந்த கண்ணாமூச்சி விளையாட்டு தானாகவே ஒருவர் மரத்தில் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு ஒன்று முதல் பத்து எண்ணவேண்டும். மற்றவர்கள் ஒளிந்து கொள்வார்கள்.
இன்னொரு முறையில் யாராவது ஒரு குழந்தையின் அக்கா, அல்லது அம்மா ஒரு குழந்தையின் தன் கைகளால் மூடி 'கண்ணா மூச்சி ரே ரே ரே. காட்டு மூச்சி ரே ரே ரே. எனக்கொரு பழம், ஒனக்கொரு பழம் கொண்டோடி வா" என்று பாடுவார்.
மற்ற குழந்தைகள் இங்கும் அங்கும் ஓடி ஒளிந்து கொள்வர். சிலர் திரு திருவென விழிப்பார்கள்.
அந்த அக்கா சைகை காட்ட அங்கு ஒளிந்து கொள்வர். சில சமயம் கண்டுப் பிடிக்கும் போதும் அக்கா சைகை காட்டுவார்.
யார் முதலில் பிடிபட்டாரோ அவரே அடுத்து கண் பொத்திக் கொள்ள வேண்டும்.
ஒளிந்து கொள்பவர்கள் தங்களை கண்டுபிடிக்கும் வரையில் எட்டிப்பார்த்து எட்டிப்பார்த்து... த்ரில்லிங்காக இருக்கும்.
கண், காது, மூளை, கை கால்கள் என்று அனைத்திற்கும் வேலை கொடுப்பதோடு, நட்பை வளர்த்து இன்னும் இறுக்கமாக அமைய உதவும் ஒரு விளையாட்டு இது.
ஒளிந்து கொள்ளவும் தெரு முழுவதும் நிறைய இடங்கள் இருக்கும். வயதானவர்கள் கூட வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ரசிப்பார்கள்.
இந்த மாதிரியான விளையாட்டுக்கள் மறந்து போனதா தெரியவில்லை. மறந்து போனோம் என்றே சொல்ல வேண்டும்.
-வி. பிரபாவதி
மடிப்பாக்கம்