இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, கடந்த டி20 உலகக்கோப்பை (2024) தொடருடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற அவர் இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
இறுதிப்போட்டி முடிந்ததும் ஆட்ட நாயகன் விருது வழங்கும் நிகழ்வில் தனது ஓய்வு குறித்த முடிவை அறிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருடன் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தனர்.
விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 125 போட்டிகளில் விளையாடி 4,188 ரன்களை 48.69 என்ற சராசரியில் குவித்துள்ளார். அத்துடன் 2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பை தொடர்களில் தொடர் நாயகன் விருதும் வென்று அசத்தியுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். அதிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடப்பு சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 443 ரன்கள் குவித்து இளம் வீரர்களுக்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து அவசரப்பட்டு ஓய்வு பெற்று விட்டதாக சுரேஷ் ரெய்னா போன்ற முன்னாள் வீரர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? என்பது குறித்து விராட் கோலி தற்போது விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “இளம் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு நேரம் தேவை என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டது. புதிதாக வரும் இளம் வீரர்கள் அழுத்தத்தைக் கையாள, உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாட வேண்டும். மேலும் உலகக்கோப்பை தொடர் வரும்போது, அவர்கள் தயாராக இருப்பதாக உணரும் அளவுக்கு போதுமான ஆட்டங்களை விளையாட 2 வருடங்கள் தேவை. இதையெல்லாம் யோசித்துத்தான் ஓய்வு பெறும் முடிவை எடுத்தேன்” என்று கூறினார்.