திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையை அடுத்த மல்லாங்கோட்டை கிராமத்தில் மேகா மெட்டல் குவாரி என்ற பெயரில் கல்குவாரி ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகைளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இங்கு சுமார் 450 அடி ஆழமுள்ள குவாரி இயங்கி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கு முன்பாக அந்த குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வெடி திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது மண் சரிந்ததில் குவாரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.
உடனே அங்கிருந்த சக தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்ததாக தெரிகிறது.
இறந்தவர்கள் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் மேலும் பலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே விபத்து குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மண்ணில் புதைந்து இறந்தவர்களில் ஒருவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.