tamilnadu epaper

சிவனுக்கு எத்தனை கண்கள்?

சிவனுக்கு எத்தனை கண்கள்?


வரதன் என்ற இயற்பெயர் கொண்ட காளமேகப் புலவர் திருவரங்கக் கோவிலின் மடைப்பள்ளியின் சமயல்காரர். இவரது கனவில் தோன்றிய அன்னை சரஸ்வதி தேவி, தனது தாம்பூலச் சாற்றை இவரது நாவில் உமிழ்ந்ததனால், கல்வியறிவு இல்லாத போதும், மேகம்போல் கவிமழை பொழியும் திறன் கைவரப் பெற்றார். அன்று முதல் சமையல்கார வரதன், கவிகாளமேகம் என்ற சிறப்புப் பெயரில் புகழ்பெற்றார் என்பது தொன்மம்.


ஒரு சமயம் காளமேகத்தின் நண்பர் ஒருவருக்கு சிவபெருமானின் கண்கள் பற்றி ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அதாவது, சிவனுக்கு சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈஸானம் என ஐந்து முகங்கள் உள்ளன. அப்படியானால் சிவனை பத்துக்கண்ணன் என்றுதானே அழைக்க வேண்டும். ஆனால் முக்கண்ணன் என்று அழைக்கிறார்களே. உண்மையில் சிவனுக்கு கண்கள் தான் எத்தனை என்று காளமேகப் புலவரிடம் கேட்டார். அதற்கு குசும்புக்கார காளமேகம் சிவனுக்கு உரியது அரைக் கண் மட்டுமே. அதனால் சிவன் அரைக்கண்ணன் என்றார். அதிர்ந்து போனார் நண்பர். அவருக்கு புலவர் அளித்த விளக்கம் :


இந்திரனுக்கு (தண்டனையாகக் கிடைத்தது) ஆயிரம் கண்கள். முகத்துக்கு இரண்டு வீதம் ஆறுமுகக் கடவுளுக்கு பன்னிரு கண்கள். நான்முகனாகிய பிரம்மனுக்கு முகத்துக்கு இரண்டு வீதம் எட்டு கண்கள். சிவனுக்கு முகத்தில் இரண்டு, நெற்றியில் ஒன்று என எண்ணிக்கையில் கண்கள் மூன்று என்பது சாதாரணக் கணக்கு. ஆனால் முக்கண்ணன் என்று சொல்லப்படும் சிவபெருமான் "தனது" என்று சொல்லிக்கொள்ள அவருக்கு அமைந்தது அரைக்கண் மட்டும் தான் என்றார். நண்பர் குழம்பினார்.


காளத்தி வேடன் தனது கண் ஒன்றை சிவனின் பழுது பட்ட கண்ணில் அப்பியதால் சிவனின் ஒரு கண் கண்ணப்பரின் கண் ஆகிப்போனது. சிவன் தன் மேனியில் நேர்பாதியை அன்னை உமையவளுக்கு அளித்து விட்டதால் சிவனின் இடது பாகத்தில் ஒரு கண்ணும், நெற்றியில் பாதிக்கண்ணும் என ஒன்றரைக்கண் உமையவளின் கண் ஆகிப்போனது. எனவே மீதமிருக்கும் அரைக்கண் மட்டுமே சிவனின் கண் ஆகிறது என்றார் புலவர். இதை ஒரு வெண்பாவாகவும் பாடிக்காட்டினார். 


"முக்கண்ணன் என்று அரனை முன்னோர் மொழிந்திடுவர் 

அக்கண்ணற்கு உள்ளது அரைக் கண்ணே - மிக்க

உமையாள் கண் ஒன்றரை மற்று ஊன்வேடன் கண் ஒன்று

அமையும் இதனால் என்று அறி".


நண்பருக்கு தலை சுற்றியது. வாயடைத்துப்போய் நகர்ந்து விட்டார்.


-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி