புதுடெல்லி,
டெல்லியில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வந்த நிலையில், நேற்று (வெள்ளி கிழமை) காலை 8.30 மணி முதல் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதில், 78 மில்லி மீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு பதிவானது. இது 1901-ம் ஆண்டில் இருந்து இதுவரை, 24 மணிநேரத்தில் பெய்த 2-வது மிக அதிக மழைப்பொழிவு ஆகும்.
இதற்கு முன்பு, 2021-ம் ஆண்டு மே 20-ந்தேதி 119.3 மில்லி மீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகி இருந்தது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதன்படி, டெல்லியின் லோதி சாலையில் 78 மில்லி மீட்டர், சப்தர்ஜங் விமான நிலையத்தில் 77 மில்லி மீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகி இருந்தது. இதனால், டெல்லியில் 120 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2-வது அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
அரபி கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து அந்த பகுதியில் நிலவிய ஈரப்பதம் மற்றும் காற்று மாறுபாடு ஆகியவற்றாலும் மற்றும் கீழ் மற்றும் மத்திய டிராபோஸ்பெரிக் மண்டலங்களில் (காற்று மண்டலம்) ஏற்பட்ட தொடர்ச்சியான சாதக சூழல் உதவியால் இந்த கனமழை பொழிவு காணப்பட்டது.
கனமழையால், 7 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உடனடியாக குறைந்தது. எனினும் திடீரென பெய்த மழையால், டெல்லியின் பல பகுதிகளில் நீர் தேங்கி, போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
குர்காவன், டெல்லி விமான நிலையம் மற்றும் மின்டோ சாலை பகுதியில் கடுமையாக நீர் தேங்கி இருந்தது. இதனால், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான டெல்லி அரசை, எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கடுமையாக சாடியது.