சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் தனியார் ஜவுளிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை:
தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவில் தரை தளம் மற்றும் 2 மாடிகளுடன் பிரபலமான ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு எப்போதும் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
நேற்று காலை வழக்கம்போல் கடை ஊழியர்கள் கடையை திறந்து பணியை கவனித்தனர். வாடிக்கையாளர்களும் வருகை தர ஆரம்பித்தனர். காலை 10.45 மணியளவில் அந்த ஜவுளிக்கடையின் 2-வது தளத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதைக் கண்ட வாடிக்கையாளர்கள் கடையிலிருந்து உடனடியாக வெளியேறினர். கடை ஊழியர்களும் ஓட்டம் பிடித்தனர்.
இந்த விபத்து குறித்து தீயணைப்பு படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தி.நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அசோக் நகர் ஆகிய பகுதிகளிலிருந்து தலா ஒரு வாகனத்தில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக 7 வாகனங்களில் தண்ணீரும் வரவழைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதால்,
அப்பகுதியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் 2-வது மாடியில் உள்ள கண்ணாடியை உடைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க வீரர்கள் போராடினர். சுமார் மூன்றரை மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் பக்கத்து கட்டிடம் மற்றும் கடைகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்தால் கடையின் 2-வது தளத்தில் துணிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால், ரங்கநாதன் தெரு முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.