சென்னை, ஏப்.19
திருவிழாக் காலங்களில் முக்கிய கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் கோவில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதுதொடர்பாக சட்டசபையில் அமைச்சர் கூறியது: ஆயிரம் இணையர்களுக்கு கோயில்கள் சார்பில் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.70 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.
ஸ்கூட்டர் மானியம்
ஒருகால பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஒருகால பூஜைத் திட்ட அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடர் கோயில் அர்ச்சகர்கள் 10 ஆயிரம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், பழனி முருகன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், மதுரை மீனாட்சி கோயில், ராமேசுவரம் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயில் மற்றும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும்.
காய்ச்சிய பால்
இதுதவிர கோயில்களில் காலியாக உள்ள ஓதுவார் பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோயில்களில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களின் பச்சிளங் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும். முதல்கட்டமாக திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி, ஆனைமலை மாசாணியம்மன், பண்ணாரி, திருப்பரங்குன்றம், மருதமலை, பெரியபாளையம் பவானியம்மன் கோயில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.