tamilnadu epaper

திருமாளம் சோமயாகப் பெருவிழா

திருமாளம் சோமயாகப் பெருவிழா

திருமாளம் ஜூன் 12 : திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் 

 உள்ள திருமாளம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ அச்சம் தீர்த்த 

 விநாயகர் கோயிலில் இன்று (11-06-2024) சோமயாகப் பெருவிழா 

 நடைபெற்றது.

 

 63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் அம்பர் மாகாளத்தில் 

 தனது மனைவி சுசீலா தேவியுடன் வசித்து வந்தார். அவருக்கு சோம 

 யாகம் செய்து அதில் ஈசன் நேரடியாக கலந்து கொண்டு அவிர்பாகம் 

 பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இறைவனின் 

 நெருங்கிய நண்பரான சுந்தரர் மூலம் மட்டுமே அது முடியும் என்று தெரிந்து 

 கொண்டார். சுந்தரரின் நீண்ட நாள் கபம் தீர அவருக்கு தூதுவளைப் பூ, காய்,

 கீரைகளை தினசரி கொடுத்து வந்தார். கபம் தீர்ந்த பிறகு சோமாசிமாற 

 நாயனாரின் எண்ணத்தை தெரிந்து கொண்டு அவர் நடத்தும் யாகத்திற்கு 

 இறைவனை அழைத்து வருவதாக வாக்கு கொடுத்தார். பின்னர் இறைவனிடம் 

 யாகம் பற்றி சொல்ல அவரும் வருவதாக சம்மதம் தெரிவித்தார். வைகாசி 

 மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்படும் என்று முடிவானது.

 

 அந்த தினத்தில் யாகம் தொடங்கி நடந்து கொண்டு இருந்த போது ஈசன் நீச 

 கோலத்தில் நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கி, மரித்த கன்றை 

 தோளில் சுமந்து விநாயகர், முருகன் குழந்தைகளாகவும் அம்பாள் மதுக்குடம் 

 சுமந்து வர தாரை தப்பட்டை ஒலி முழக்கத்துடன் யாகம் நடக்கும் திருமாளம் 

 விநாயகர் ஆலயத்திற்கு வந்தார். அந்த கோலத்தில் அவரைக் கண்டதும் 

 முனிவர்களும் ரிஷிகளும் யாக சாலையில் இருந்து ஓடினார்கள். அவர்கள் 

 அச்சம் போக்கி வந்திருப்பது இறைவன் தான் என்பதை விநாயகர் உணர்த்தினார்.

 அதனால் அவர் அச்சம் தீர்த்த விநாயகர் ஆனார். இறைவனும் அவிர்பாகம் 

 பெற்றுக்கொண்டு நீச உரு நீங்கி ரிடபாரூடராய் காட்சி கொடுத்தார்.

 

 இந்த நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் 

 கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று (11-06-2024) மதியம் 1-30 மணிக்கு மேல் 

 இறைவன் அந்த யாகத்தில் கலந்து கொள்ளும் திருவிழா நடைபெற்றது.

 ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

                                                  ===

 

திருமாளம் எஸ். பழனிவேல்