tamilnadu epaper

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: பஞ்சாப் முதல்வருக்கு திமுக அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: பஞ்சாப் முதல்வருக்கு திமுக அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மானுக்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் அடங்கிய குழு தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.


சென்னையில் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதற்கான கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர்களுக்கு திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறது. கடந்த மார்ச் 13-ஆம் தேதி தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான குழு தில்லியில் தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தது.


இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானை தில்லி தாஜ்மான் சிங் சாலையில் உள்ள கபூர்தலா அரசு இல்லத்தில் சட்டத் துறை அமைச்சர் அமைச்சர் எஸ். ரகுபதி, நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் கனிமொழி, எம்.பி.க்கள் கனிமொழி என்.வி.என். சோமு, எம்.எம்.அப்துல்லா ஆகியோர் புதன்கிழமை மாலை நேரில் சந்தித்தனர்.


அப்போது, சென்னையில் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.