அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்தவும், நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அரசுஉத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பாதிப்புகளும் அச்சுறுத்தலான சூழலும் நிலவுவதை கருத்தில்கொண்டு, இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள், கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய, குறிப்பாக நகரப் பகுதிகளில், நாய்கள் இனப்பெருக்க கட்டுபாடு நடவடிக்கைகளை தீவிரமான முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு நல்லதொரு மாற்றத்தை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.
நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 500 மருத்துவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கிடவும், உள்ளாட்சி அமைப்புகளில் 500 நபர்களுக்கு நாய்களை பிடிப்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும். கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு 72 காப்பகங்கள் அமைக்கப்படும். காப்பகங்கள் அமைக்க இடம் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும்.
தொண்டு நிறுவனங்கள் இக்காப்பகங்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்ளும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக அறுவை சிகிச்சை மையங்கள் மற்றும் அத்துடன் இணைந்த நாய் காப்பகங்கள் கால்நடை மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.