புதுடெல்லி, மார்ச் 9
நிலவில் பனிப்படிவுகள் இருப்பதை சந்திரயான் 3 விண்கலம் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக இந்தியா விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தில் இருந்து வந்த லேண்டர், ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாலை 6 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில் நிலவில் உறைந்த நிலையில் பனிப்படிவுகள் இருப்பதை சந்திரயான் 3 விண்கலம் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல், அதிக எலக்ட்ரான் அடர்த்தி இருப்பதும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பிளாஸ்மா இயக்கவியலில், சந்திரனின் மேல் ஓட்டு பகுதியில் காந்தப்புலங்களின் அதிகபடியான பங்கைக் குறிக்கிறது.
சந்திரனில் ஒரு கன செ.மீ.க்கு சுமார் 23,000 எலக்ட்ரான்கள் என வியக்கத்தக்க உயர் எலக்ட்ரான் அடர்த்தியை வெளிப்படுத்துகிறது. இது சூரிய ஒளி பக்கத்தில் உள்ளதை விட, கிட்டதட்ட 100 மடங்கு அதிகம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் எதிர்கால சந்திர ஆய்வுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.