tamilnadu epaper

நெல்லை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது வழக்கு

நெல்லை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது வழக்கு

நெல்லை:


நெல்லை டவுனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். தொடர்ந்து அங்கு தற்காலிக பேராசிரியராக சில வருடங்களாக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் ஆராய்ச்சி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது அங்கு வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த அம்பையை சேர்ந்த கண்ணன்(வயது 55) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும், தனது ஆராய்ச்சி படிப்பை முடிப்பதற்கு பல்வேறு தடைகளை அவர் ஏற்படுத்தியதாகவும் அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை மாநில மகளிர் ஆணையம், பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோருக்கு சமீபத்தில் புகார் மனு அளித்தார்.


அந்த புகாரையடுத்து மகளிர் ஆணைய அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.


இதனிடையே இளம்பெண் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாணவியாக இருந்தபோது பேராசிரியர் கண்ணன் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்ததாகவும், தற்போது தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களை எனக்கு எதிராக தூண்டி விட்டு அசவுகரியமான சூழ்நிலையை உருவாக்கியதாகவும் புகார் அளித்தாா.


அதன் அடிப்படையில் நெல்லை மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் கீதா, டவுன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட அந்த முன்னாள் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.


இந்த நிலையில் அவரது புகார் மனு குறித்து பல்கலைக்கழக அளவில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்திட நேற்று முன்தினம் துணை வேந்தர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முதல் விசாரணை தொடங்கி உள்ளது.


இதற்கிடையே பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி, டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் கண்ணன் மீது இந்திய தண்டனை சட்டம் 354(ஏ)-பாலியல் துன்புறுத்தல் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.