tamilnadu epaper

பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம்: வழக்குரைஞர் வில்சன்

பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம்: வழக்குரைஞர் வில்சன்

சென்னை:

ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக, தங்களது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் கிடைத்திருப்பதாக வழக்குரைஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திமுக மூத்த வழக்குரைஞர் வில்சன் செய்தியாளர்களை சந்தித்து, தமிழக ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களை நிறைவேற்றப்பட்டதாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார்.


அவர் கூறியதாவது, ஆர்.என். ரவி, ஆளுநர் பதவியில் அமர்ந்துகொண்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை தடுத்து வந்துள்ளார். எனவே, பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கக் கூடாது, துணைவேந்தர்கள் நியமிப்பதில் மாநில அரசுக்கே அதிகாரம் வழங்க வேண்டும் என்ற மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியிருந்த நிலையில், அதற்கு தற்போது உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.


பல்வேறு மசோதாக்களை தமிழக அரசு அனுப்பியிருந்த நிலையில், அதனை ஆளுநர் கிடப்பில் வைத்திருந்ததால், வழக்குத் தொடர்வதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மசோதாக்கள் நிலுவையில் இருப்பதால், ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டாம், உச்ச நீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவித்துவிட்டது.


அதாவது, அண்ணா பல்கலை., கால்நடை மருத்துவப் பல்கலை. மற்றும் தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.