tamilnadu epaper

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி நியமனம்

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி நியமனம்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட், டி 20 போட்டிகளுக்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேனும், இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போது பயிற்சியாளராக இருந்தவருமான கேரி கிர்ஸ்டனும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் கில்லெஸ்பியையும் பயிற்சியாளர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இவர்களுடன் அனைத்து வடிவிலான போட்டிக்கும் துணை பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான அசார் முகமது செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் மே மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த தொடரில் கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறத் தவறியது. இதைத் தொடர்ந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், இயக்குநர் மிக்கி ஆர்தர், பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்ன் மோர்க்கல், பேட்டிங் பயிற்சியாளர் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் நீக்கப்பட்டனர். மேலும் பாபர் அஸம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து ஷாகீன் ஷா அப்ரிடி ஒருநாள் போட்டி மற்றும் டி 20-க்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். டெஸ்ட் போட்டிக்கு ஷான் மசூத் கேப்டனாக செயல்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் வழிகாட்டியாக செயல்பட்டார். ஆனால் அந்த பயணத்தில் டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 0-3 எனவும் டி20 தொடரை 1-4 எனவும் இழந்ததால் முகமது ஹபீஸ் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஷாகீன் ஷா அப்ரிடி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் பாபர் அஸம் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து முழுநேர பயிற்சியாளரை நியமிக்கும் பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரப்படுத்தியது. இதன் அடிப்படையில் தற்போது கேரி கிர்ஸ்டனும், கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.