குவாஹாட்டி:
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்ததாக அசாம் (14), மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் எம்எல்ஏ அமினுல் இஸ்லாம், தேசத் துரோக சட்டப் பிரிவின் கீழ் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். காஷ்மீரில் நிகழ்ந்த தாக்குதல் மற்றும் 2019-ம் ஆண்டில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் ஆகியவை அரசின் சதி வேலை என கூறியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாக ஒரு பத்திரிகையாளர், ஒரு கல்லூரி மாணவர், ஒரு வழக்கறிஞர் உட்பட 6 பேர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும் இந்தியாவுக்கு எதிரான கருத்து தெரிவித்ததாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “தேவைப்பட்டால் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். அனைத்து சமூக ஊடக பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம். நாட்டு நலனுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதுபோல சமூக வலைதளங்களில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 2 ஆசிரியர்கள் உட்பட 4 பேரும் மேகாலயாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.