புதுடெல்லி:
இந்திய கடற்படைக்காக பிரான்சிடமிருந்து 26 ரஃபேல் மரைன் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
26 விமானங்களில் 22 விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து இயக்கக்கூடிய ஒற்றை இருக்கை ஜெட் விமானங்களாகும். மற்ற நான்கு, இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்களாகும். இரு அரசுகளுக்கும் இடையிலான ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஒப்புதலை அடுத்து, இந்த மாத இறுதியில் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தரும் போது ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய கடற்படையின் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து இயக்கப்படும் ரஃபேல்-எம் விமானங்களின் விநியோகம் தொடங்கும். இந்திய விமானப் படை, ஏற்கெனவே செப்டம்பர் 2016-இல் கையெழுத்திடப்பட்ட ரூ.60,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்பட்ட 36 ரஃபேல் ஜெட் விமானங்களை இயக்குகிறது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இரட்டை எஞ்சின் டெக்-அடிப்படையிலான போர் விமானம் (TEDBF) சேவையில் சேர்க்கப்படும் வரை, ரஃபேல்-எம் ஜெட் விமானங்கள் எண்ணிக்கையில் உள்ள இடைவெளியை நிரப்பும். கடற்படை தற்போது இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை இயக்குகிறது. அவை ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் செப்டம்பர் 2022 இல் இயக்கப்பட்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும்.