tamilnadu epaper

மகா கும்பமேளா உயிரிழப்பு பற்றி பிரதமர் பேசாதது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

மகா கும்பமேளா உயிரிழப்பு பற்றி பிரதமர் பேசாதது ஏன்?   ராகுல்காந்தி கேள்வி


புதுடெல்லி, மார்ச் 19–

உ.பி. மகா கும்பமேளாவில் உயிர்ப்பலி பற்றி பிரதமர் பேசாதது ஏன் என்று ராகுல் கேள்வி எழுப்பினார். 

மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி, “மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்த முடிந்த கோடிக்கணக்கான நாட்டு மக்களை நான் வாழ்த்துகிறேன். மகா கும்பமேளாவின் வெற்றிக்கு பலர் பங்களித்தனர். உ.பி. மற்றும் பிரயாக்ராஜ் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். மகா கும்பமேளாவின் போது இந்தியாவின் மகத்துவத்தை உலகம் முழுவதும் கண்டது. பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவின் வெற்றிக்குப் பங்களித்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்” என்றார். 

 பிரதமர் பேசி முடித்த பின்னர் எந்தக் கேள்வியும் எழுப்பக் கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.  

ராகுல் கேள்வி

இந்த நிலையில் பிரதமர் மோடியின் பேச்சு குறித்து மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவை வளாகத்தில் ராகுல் அளித்த பேட்டியில், “மகா கும்பமேளா பற்றி பிரதமர் மோடி பெருமையாக கூறியதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி ஏன் அவர் பேசவில்லை? மகா கும்பமேளாவுக்குச் சென்ற இளைஞர்கள் பிரதமரிடமிருந்து எதிர்பார்ப்பது வேலைவாய்ப்பு. ஜனநாயகக் கட்டமைப்பின்படி, மக்களவையில் அனைவரும் இதுகுறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும், ஆனால் எங்களைப் பேச அனுமதிக்கமாட்டார்கள். இதுதான் புதிய இந்தியா” என்றார்.

மாகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதிவரை பிரயாக்ராஜில் நடைபெற்றது . இதில் 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பிரயாக்ராஜில் உள்ள திரிமேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதற்கிடையே மெளனி அமாவாசையின் ஏராளமான பக்தர்கள் அங்கு கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.