tamilnadu epaper

மகா கும்பமேளாவை கண்டு நாட்டின் பிரம்மாண்டத்தை உலகமே வியந்தது பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

மகா கும்பமேளாவை கண்டு நாட்டின் பிரம்மாண்டத்தை உலகமே வியந்தது பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, மார்ச் 18


நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாக கும்பமேளா அமைந்தது என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அப்போது நாட்டின் பிரம்மாண்டத்தை ஒட்டுமொத்த உலகமும் கண்டு வியந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.


உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கி, மகா சிவராத்திரி திருநாளான பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா விழாவானது வெகுவிமர்சையாக நடைபெற்று நிறைவுற்றது. குளிரையும் பொருட்படுத்தாமல் நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடினர். நிகழ்வு நடந்த 45 நாள்களில் சாதுக்கள், துறவிகள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என சுமார் 66 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல் பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா, தென்கொரியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்து இந்து மதத்தைப் பின்பற்றுவோரும், சுற்றுலாப் பயணிகளும் மகா கும்பமேளாவில் பங்கேற்று, இந்தியாவின் பிரமிப்பான கலாச்சாரத்தைக் கண்டு வியந்தனர்.


மகா கும்பமேளாவின் வெற்றி குறித்து மக்களவையில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:


கோடிக்கணக்கான மக்களின் வருகையால் மகா கும்ப மேளா சிறப்படைந்தது. மகா கும்பமேளாவை வெற்றியடைய செய்த பக்தர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. மகா கும்பமேளாவின் வெற்றியில் அரசு, சமுதாயம், மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவருடைய பங்கும் உள்ளது.


பகத்சிங், காந்தியைபோல் நாட்டின் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக மகா கும்பமேளா இருந்தது. கங்கா தேவியை பூமிக்கு கொண்டு வருவதற்கு பகிரத மன்னன் முயற்சி மேற்கொண்டது நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். அதே போன்று ஒரு பகிரத முயற்சியை இந்த மகா கும்பமேளாவில் நாம் பார்த்தோம். மிகப்பெரிய இலக்குகளை நோக்கிய தேசிய நலனின் அடையாளமாக மகா கும்பமேளா விளங்கியது.


அமைதியை குலைக்க


நினைத்த சக்திகள்


நாட்டின் ஒற்றுமையால் கிடைத்த சக்தி, இந்தியாவின் அமைதியைக் குலைக்க நினைத்த அனைத்துச் சக்திகளையும் ஆட்டம் காண வைத்துவிட்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் சிறப்பு, பிரயாக்ராஜில் அதைத்தான் ஒட்டுமொத்த நாடும் அனுபவித்தது. இதனை விட்டுவிடாமல் தொடர்ந்து வளப்படுத்த வேண்டும். இந்தியாவின் புதிய தலைமுறையினருக்கும் மகா கும்பமேளாவுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் நமது பாரம்பரியங்களையும் நம்பிக்கையையும் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். மகா கும்பமேளாவின் வெற்றி நாட்டின் எழுச்சியை வெளிப்படுத்துகிறது. மகா கும்பமேளாவின்போது, நாட்டின் பிரம்மாண்டத்தை ஒட்டுமொத்த உலகமும் கண்டு வியந்தது.


மொரிசியஸ் சென்ற போது திரிவேணி சங்கமத்தில் சேகரித்த புனித கலச நீரை கொண்டு சென்றேன். புனித நீரை மொரிசியஸ் நாட்டில் உள்ள கங்கா தலால் ஆற்றில் அர்ப்பணித்தேன்.


இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


இதனிடையே பிரதமர் மோடி பேசும் போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.