மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை காங்கிரஸ் உறுப்பினர்கள் எடுத்துரைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,
"நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், காங்கிரஸ் தலைமையிலான நிலைக் குழுக்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல பரிந்துரைகளை வழங்கியுள்ளன.
சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான விவசாயக் குழு, குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் அளித்து விவசாயிகள், மீனவர்களுக்கான முக்கிய பாதுகாப்புகளுடன் பயிர்க் கழிவுகளை சேகரிப்பதற்கான கூடுதல் இழப்பீட்டை பரிந்துரைத்தது.
காங்கிரஸ் எம்.பி. சப்தகிரி உலகா, கிராமப்புற மேம்பாட்டுக் குழு மற்றும் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் மக்களவையில் பேசினார்.
அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான குழு, கல்வி நிறுவனங்களில் அதிக ஆசிரியர்களை நியமிக்கவும், வினாத்தாள் கசிவை முடிவுக்குக் கொண்டுவர சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சரியாக நேரத்தில் ஊதியங்களை வழங்கவும் எடுத்துரைத்தது.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான வெளியுறவுக் குழு, வெளிநாடுகளில் குடியேறிய இந்திய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புகளின் அவசியத்தை அவையில் பேசியது.
மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்புக்கு இவையெல்லாம் ஒரு சில எடுத்துக்காட்டுகள்தான்.
எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாட்டு மக்களின் உரிமைகள், நல்வாழ்வுக்காகப் போராட ஒவ்வொரு ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.