தூத்துக்குடி, ஏப். 22 –
கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தர்கள் இதுவரை அளித்த மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி கே.வி.கே., நகர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார். மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர். இவர் தனது சகோதரர் சரவணனுடன் சேர்ந்து வி.எம்.எஸ்.நகர் பகுதியில் 5 சென்ட் நிலம் வாங்கினார்.
சில நாட்கள் கழித்து அந்த இடம் போலி ஆவணங்கள் மூலம் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி மோசடியாக விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் ர் செல்வகுமார் அவரது மனைவி கார்த்திகா, சகோதரர் சரவணன் ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். இதுவரை அளித்த மனுக்களின் நகல்களை சரவணனும், கார்த்திகாவும் மாலையாக அணிந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்துள்ளோம். நிலமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.