போபால்,:
மத்திய பிரதேசத்தில், முதியோர் இல்லத்துக்கு செல்ல மறுத்த மாமியாரின் தலை முடியை பிடித்து இழுத்து, மருமகள் சரமாரியாக தாக்கினார்.
மத்திய பிரதேசம் குவாலியரின் ஆதர்ஷ் காலனியில் வசிப்பவர் விஷால் பத்ரா; இவரது மனைவி நீலிகா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
விஷாலின் தாய் சரளா பத்ரா, 70. அனைவரும் ஒரே வீட்டில் வசித்த நிலையில், மாமியாரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும்படி, கணவருக்கு நீலிகா நெருக்கடி கொடுத்துள்ளார்.
தாயை வெளியே அனுப்ப விஷால் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. இதை, தன் தந்தை சுரேந்திர கோலி, சகோதரர் நானக் கோலியிடம் நீலிகா கூறினார். அவர்கள், சில அடியாட்களுடன் விஷாலின் வீட்டுக்குச் சென்றனர்.
விஷாலை மருமகன் என்றும் பார்க்காமல் சுரேந்திர கோலி தாக்கினார். பதிலுக்கு விஷால் அடிக்க முயன்றபோது, நானக் மற்றும் அவருடன் வந்தவர்கள் விஷாலை சரமாரியாக அடித்தனர்.
தடுக்க முயற்சித்த சரளாவுக்கும் சரமாரியாக அடி விழுந்தது.
இதற்கிடையே, முதல் மாடியில் இருந்து ஓடி வந்த நீலிகா, மாமியார் சரளாவின் தலைமுடியை பிடித்து தரதரவென தெருவுக்கு இழுத்துச் சென்றதோடு, கைகளால் சரமாரியாக அடித்தார்.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, விஷாலையும், சரளாவையும் காப்பாற்றியதோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.
மிரட்டல்
இது குறித்து விஷால் கூறுகையில், “என் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை, மனைவி வீட்டார் அபகரிக்க முயற்சிக்கின்றனர். என் மீது பொய் புகார் கொடுக்கப்போவதாக நீலிகா மிரட்டுகிறார்.
''உ.பி.,யின் மீரட்டில், மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்முக்குள் அடைத்தது போல், எனக்கும் நடந்து விடுமோ என பயமாக இருக்கிறது,” என்றார்.