tamilnadu epaper

முஸ்லிம்களுக்கு ஒப்பந்த பணிகளில் 4% இடஒதுக்கீடு: கர்நாடக அரசின் முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு

முஸ்லிம்களுக்கு ஒப்பந்த பணிகளில் 4% இடஒதுக்கீடு: கர்நாடக அரசின் முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு

கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஒப்பந்த பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை போல, முஸ்லிம்களுக்கு 2பி பிரிவில் ரூ.1 கோடி வரையிலான ஒப்பந்த பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


பாஜக எதிர்ப்பு: இதுகுறித்து பாஜக மூத்த‌ தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "தனித் தொகுதி, தனி பல்கலைக்கழகம் ஆகியவை நாட்டில் பிரிவினைக்கு வழிவகுத்திருக்கின்றன. அதுபோல மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது பிரிவினையை அதிகரிக்கும். வாக்கு வங்கியை மனதில் வைத்து காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.


ராகுல் காந்தியின் விருப்பப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சட்டத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் காங்கிரஸ் தவறாக பயன்படுத்துகிறது. நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது" என்றார்.


பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறுகையில், "தேர்தல் அரசியலுக்காக காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கர்நாடக அரசின் இந்த முடிவு மத மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அரசின் அதிகாரத்தையும், பொது வளங்களையும் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் தவறாகப் பயன்படுத்துகிறது. நாட்டின் பொருளாதாரத்தை அரசியல் தேவைக்காக விளையாட்டு மைதானமாக காங்கிரஸ் மாற்றிவிட்ட‌து" என்றார்.


கர்நாடக அரசு விளக்கம்: இதற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், "க‌ர்நாடக அரசின் முடிவை எதிர்க்கட்சியினர் மடை மாற்றுகின்றனர். இந்த இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஒப்பந்த பணிகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டதைப் போல மத சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சிறுபான்மையினரும் பலன் அடைவார்கள்" என விளக்கம் அளித்துள்ளார்.