tamilnadu epaper

ரூ.16 ஆயிரம் கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.16 ஆயிரம் கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, மார்ச்.20-


பால், உர உற்பத்தி, யு.பி.ஐ. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ரூ.16 ஆயிரம் கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.


பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இதில் முக்கியமாக பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மாற்றியமைக்கப்பட்ட ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் மற்றும் தேசிய பண்ணை மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கான செலவினத்தை ரூ.6,190 கோடியாக அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.


அதன்படி 2021- 22 முதல் 2025 -26-ம் ஆண்டு வரையிலான 15-வது நிதிக்குழு காலத்தில் ராஷ்ட்ரீய கோகுல் மிஷனுக்கான நிதியில் மேலும் ரூ.1000 கோடி உயர்த்தி ரூ.3,400 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.


இதைப்போல தேசிய பண்ணை மேம்பாட்டு திட்டத்திலும் ரூ.1000 கோடி அதிகரித்து ரூ.2,790 கோடியாக உயர்த்தப்படுகிறது.


மேற்படி 2 திட்டங்களால் பண்ணை உள்கட்டமைப்புகள் நவீனப்படுத்தி, விரிவுபடுத்தப்படும்.


ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் மற்றும் அரசின் பிற திட்டங்கள் மூலம், கடந்த 10 ஆண்டுகளில் பால் உற்பத்தி 63.55 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் உற்பத்தி திறனும் 26.34 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.


மேலும் குறைந்த மதிப்பிலான யு.பி.ஐ. பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்காக 2024 -25-ம் நிதியாண்டில் சுமார் ரூ.1,500 கோடி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது.


அதன்படி சிறு வணிகர் ஒருவருக்கு தனிநபர் ஒருவர் யு.பி.ஐ. மூலம் ரூ.2000-க்கு கீழே பரிமாற்றம் செய்யும்போது இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு பரிமாற்றத்தின்போது தொகையின் மதிப்பில் 0.15 சதவீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.


சிறு வணிகர்களுக்கு ரூ.2,000 வரையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும்.


மராட்டியத்தின் ஜே.என்.பி.ஏ. துறைமுகம் (பாகோட்) முதல் சவுக் வரையிலான 29.219 கி.மீ. தொலைவுக்கு ரூ.4,500.62 கோடியில் 6 வழி அதிவேக பசுமை நெடுஞ்சாலை அமைக்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.


ஜே.என்.பி.ஏ. துறைமுகத்தில் அதிகரித்து வரும் கன்டெய்னர்களை கையாளும் திறன் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில் இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இணைப்பை மேம்படுத்துவதற்கான தேவை எழுந்து உள்ளது.


அதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்துக்கு அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.


இதைப்போல அசாமில் ரூ.10,601.4 கோடியில் யூரியா உர ஆலை தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த ஆலை மூலம் ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.


யூரியா இறக்குமதியை குறைக்கவும், உர உற்பத்தியில் தற்சார்பை எட்டவும் இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.


இந்த தகவல்களை மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.