இங்கும் உள்ளான்"


இதோ " />

tamilnadu epaper

ஹரே கிருஷ்ணா - ஆன்மீகப்பதிவு

ஹரே கிருஷ்ணா -  ஆன்மீகப்பதிவு

ஸ்ரீமத் பாகவதம் 

பகவான் நரசிம்மரின் அவதாரம் :


 இரண்யகசிபுவால், ஒரு தூணைக் காட்டி இங்கு இருக்கின்றானா உன் நாராயணன் என்று பிரஹ்லாதனிடம் கேட்டவுடன், 


"எங்கும் உள்ளான். 

இங்கும் உள்ளான்"


இதோ இங்கு இருக்கும் ஒவ்வொரு துரும்பிலும் உள்ளான். ஒவ்வொரு தூணிலும் உள்ளான். என்று பதில் கூறினான் பிரஹ்லாதன்.


 அதனை நம்ப முடியாத இரண்யகசிபு கோபத்தால் கொக்கரித்தான்,

ஆனால் பகவான் நரசிம்மாரோ,

தன்னுடைய பக்தனின் நம்பிக்கையைக் காப்பாற்ற அங்கிருந்த ஒவ்வொரு தூணிலும், ஒவ்வொரு துரும்பிலும், 

 தயாராக நின்றிருந்தார், எந்தத் தூணைத் தட்டினாலும், உடனே வெளி வருவதற்காக , பக்தனை ரக்ஷிப்பதற்காக, காத்திருந்தார்.


இதோ! நாம் அனைவரும் பகவான் நரசிம்மரை தரிசனம் செய்யத் தயாராவோம்.


 இதுவரை காணப்படாத ஒரு உருவம். மனிதனா? சிங்கமா? என்று அறிய முடியாத பகவானின் அந்த அற்புதமான ரூபம் தூணில் இருந்து வெளிப்பட்டது. அந்த ரூபத்தைக் கண்ட இரண்யகசிபு "பாதி மனிதன், பாதி சிங்க உருவமுள்ள இது என்ன ஜீவன்?" என்று ஆச்சரியப்பட்டான்.


 ஸ்ரீமத் பாகவதம் 7.8.19


மீமாப்ஸமானஸ்ய ஸமுத்திதோ க்ரதோ

ந்ருஸிம்ஹ.. ரூபஸ் தத் அலம் பயானகம்

 ப்ரதப்த-சாமீகர- கண்ட- லோசனம்

ஸ்ஃபுயத்- ஸடா- கேசர- ஜ்ரும்பிதானனம் கரால தம்ஸ்டிரம் கரவால - சஞ்சல க்ஷுராந்த-ஜிஹ்வம் ப்ருகுடீ-முகோல்பணம்


மீமாப்ஸமானஸ்ய

 ஸமுத்தித: 

அக்ரத:

ந்ருஸிம்ஹ.. ரூப:

 தத் 

அலம் 

பயானகம்

 ப்ரதப்த-

சாமீகர

சண்ட- லோசனம்

ஸ்ஃபுயத்-

 ஸடா- கேசர- 

ஜ்ரும்பிதானனம் 

கரால 

தம்ஸ்டிரம் 

கரவால - சஞ்சல 

க்ஷுர அந்த-

ஜிஹ்வம் 

ப்ருகுடீ-முக

உல்பணம்


 தன் முன்னே நிற்கும் இந்த ரூபம் யாருடையது? யாராக இருக்கக்கூடும் என்று முடிவு செய்யும் முயற்சியில்,

பகவானுடைய அற்புத ரூபத்தைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த, இரண்யகசிபுவின் முன் பகவான் "ந்ருஸிம்ஹ " ரூபத்தில் தோன்றினான்.


'ந்ரு' என்றால் நர வடிவம்,

 மனித வடிவம்.

"ஸிம்ஹம்" என்றால் சிங்க வடிவம்.

 கழுத்திற்கு மேலே சிங்க உருவம்.

 கழுத்திற்குக் கீழே மனித வடிவம்.

 பழுக்கக் காய்ச்சிய தங்கத்தை ஒத்த அவரது கோபக் கண்களின் காரணத்தால், நரசிம்மருடைய ரூபம் பயங்கரமாகக் காட்சி தந்தது. ஜொலிக்கும் அவரது பிடரி மயிர், அவரது திருமுகம் எங்கும் பரவிக் கிடந்தது. பகவானுடைய பற்கள் கோரமாக இருந்தன. கத்தி போல் கூர்மையான அவரது நாக்கு, சுழலும் வாள் போல் அசைந்தாடியது.

 வளைந்த புருவத்துடனும், நிமிர்ந்த காதுகளுடனும், காணப்பட்டார். அவருடைய நாசியும், பிளந்த வாயும் மலைக் குகைகள் போல் காணப்பட்டன அவரது தாடைகள் பயங்கரமாக பிரிந்து இருந்தன.


 பெரிய திருமேனியோடுக் காணப்பட்டார். அவருடைய தலை வானத்தைத் தொட்டது. அவரது கழுத்து குறுகியதாகவும், பருத்தும் இருந்தது. நரசிம்மருடைய மார்பு அகன்றும் இடை மெல்லியதாகவும் இருந்தன. அவரது உடலில் இருந்த ரோமம் நிலவொளி போல் வெண்மையாக இருந்தது. நூற்றுக்கணக்கான திருக்கரங்களுடன் காட்சி அளித்தார். அவருடைய திருகரங்களிலே, எவை ஆயுதங்களாக இருந்தன தெரியுமா? நகங்களே ஆயுதங்களாக இருந்தன. அசுரர்களையும், கயவர்களையும் அவர் கொல்லும் பொழுது அவரது கைகள் எல்லா திசைகளிலும் பரவிக் கிடந்தன.


 பிரம்மாவால் படைக்கப்பட்ட எந்த ஒரு பொருளாலும், உயிரினங்களாலும் தனக்கு மரணம் கூடாது, என்ற வரத்தைப் பெற்றிருந்தான். ஆனால் பிரம்மாவையே படைத்த அந்த நாராயணன் வந்து விட்டான்.


 நரசிம்மரின் தோற்றமானது, பயங்கரமாக காட்சியளித்தது. இங்கு பயங்கரம் என்பது, (பயம் என்பது) இரண்யகசிபுவைப் போன்ற அசுரர்களுக்கு மட்டுமே. பக்தர்களுக்கு என்றுமே பகவானுடைய தோற்றம் பயத்தை அளிக்காது. 


 இப்பேற்பட்ட பகவானைக் கண்டால், நாம் கை கூப்பி வணங்குவோம் அல்லவா?


 பெரியாழ்வார் தன்னுடைய பாசுரத்தில் பாடவில்லையா?


 எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் 

ஏழ்படி கால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் 

திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் 

அரியுரு வாகி அரியை அழித்தவனை 

பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே


        (திருப்பல்லாண்டு பாசுரம் 6)


 நரசிம்மப் பெருமானுக்கு பல்லாண்டு பாடினார்.


 ஆனால் இரண்ய கசிபுவோ, காட்டில் எப்படி யானைகளுக்கும், சிங்கங்களுக்கும் இடையே சண்டை நடக்குமோ, அதுபோல பகவானுக்கு அஞ்சாத இரண்யகசிபு ஒரு யானையைப் போல், கதையை கையில் எடுத்துக் கொண்டு பகவானைத் தாக்கினான். அப்படித் தாக்கிய இரணியகசிபு, அவரது பெரும் ஜோதியில் மறைந்து போனான்.


 மீண்டும் கோபமடைந்த இரண்யகசிபு, வேகமாகப் பாய்ந்து வந்து மீண்டும் தாக்கத் துவங்கினான். ஆனால் நரசிம்மப் பெருமானோ, ஒரு பெரிய பாம்பை பிடிப்பது போல் அந்த பெரிய அசுரனைப் பிடித்தார்.


 நாரதர் கூறுகிறார்.

யுதிஷ்டிரரே! கருடன்

சில சமயம் விளையாட்டாக பாம்பைத் தன் வாயிலிருந்து நழுவ விடும். அதுபோல, பகவான் நரசிம்மரும் இரண்யகசிபுவை தன் கையிலிருந்து நழுவிச் செல்ல ஒரு வாய்ப்பு அளித்தார்.


 இரண்யகசிபுவினால்,

தங்களுடைய இருப்பிடங்களை இழந்து, பயந்து வாழ்ந்த தேவர்கள், பகவானுடைய செயலைப் பார்த்து பயந்தனர்.


 பகவானுடைய கையில் இருந்து வெளிவந்த, இரண்யகசிபு, தன் வீரத்தைக் கண்டு பகவான் பயந்து விட்டதாக எண்ணினான். பின் தன் கத்தியையும் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு, பகவானை மீண்டும் பலமாகத் தாக்கினான்.


 பகவான், நரசிம்மர் அட்டகாசமான சிரிப்பொலியை செய்தார். அதன் பின்னர் கத்தியாலும், கேடயத்தாலும் தன்னைப் பாதுகாத்து வந்த இரண்யகசிபுவை பகவான் பிடித்தார்.


 நரசிம்மருடைய கைகளில் சிக்கிய இரண்யகசிபு அவருடைய சிரிப்பொலியின் பயத்தினால் கண்களை மூடிக்கொண்ட படி ஆகாயத்திலும் சில சமயம் பூமியிலும் சஞ்சரித்தான்.


 இந்திரனின் வஜ்ராயுதத்தாலும் துளைக்க முடியாத இரண்யகசிபுவை பிடித்து, நான்கு திசையிலும் அவனது அங்கங்கள் சுழல, பகவான் நரசிம்மர் அங்கு ஒரு வாயிற் படியில் , இரண்ய கசிபுவை தனது தொடைமேல் கிடத்திக் கொண்டு , தமது விரல் நகங்களால், அவனது மார்பை கரகர வென்று கிழித்தார். இரத்தம் எங்கும் சிதறியது. இரண்யகசிபுவே பொன்னிறமானவன்.


 தன்னுடைய பக்தனைத் துன்பப்படுத்திய கோபத்தில், பகவானின் முகமும் சிவந்து காணப்பட்டது. இரண்யகசிபுவை கிழிக்கும் பொழுது தெரிந்த ரத்தத் துளிகளாலும் அவர் திருமுகம் சிவந்து காணப்பட்டது. அவனது குடலை எடுத்து மாலையாக அணிந்து கொண்டார். அந்த காட்சி அழகுக்கு அழகூட்டியது.


பரியனாகி வந்த* அவுணன் உடல்கீண்ட,* அமரர்க்கு-

அரிய ஆதிபிரான்* அரங்கத்து அமலன் முகத்து,*

கரியவாகிப் புடைபரந்து* மிளிர்ந்து செவ்வரிஓடி* நீண்டவப்‍ பெரிய வாய கண்கள்* என்னைப் பேதைமை செய்தனவே!


( அமலனாதிபிரான் 934)


 என்று திருப்பாணாழ்வார் பாடியது போல், அத்தனை அழகு.


  பகவான் நரசிம்மர், இங்கு பிரம்மாவின் வரத்தைக் காப்பாற்ற, நிலத்திலோ, ஆகாயத்திலோ தனக்கு மரணம் இல்லை என்ற வரத்தின் படி, தன் தொடை மீது கிடத்தினார். பகலிலோ, இரவிலோ தனக்கு மரணம் இல்லை என்ற வரத்தின் படி, பகலின் முடிவும், இரவின் ஆரம்பமுமான சாயங்கால வேளையில் அவனைக் கொன்றார். உயிருள்ள அல்லது உயிரற்ற எந்த ஆயுதத்தாலும் எந்த மனிதனாலும் மரணம் இல்லை என்ற வரத்தின் படி, உயிர் உள்ளதும் அல்லாத, உயிர் அற்றதும் அல்லாத, ஆயுதமும் அல்லாத நகங்களினால் கிழித்தார். நகங்களை உயிர் உள்ளதாகவும் கொள்ளலாம். உயிரற்றதாகவும் கொள்ளலாம். இப்படி அனைவரும் வியக்கும் வண்ணம், மிகவும் எளிதாக, இரண்ய கசிபுவை வதம் செய்தார்.


 இரண்யகசிபுவின் மார்பில், ரத்தக் குவியல்களுக்கு நடுவிலே, கையை விட்டு தேடிப் பார்த்தார், எங்காவது துளியேனும் அவனுக்கு நல்ல எண்ணம் உள்ளதா என்று. அப்படி இருந்தால் அவனை மன்னித்து விடலாம் என்று எண்ணினார். அப்படி இல்லாத காரணத்தால் தான், அவனைக் கிழித்துக் கதையை முடித்தார்.


 இரத்தத்திற்கு நடுவிலே பகவானுடைய பிரதிபிம்பம் அதில் தெரிந்தது. அதைப் பார்த்து நரசிம்ம பகவானுக்கு கோபம் அதிகமானது. சுற்றியிருந்த தேவர்கள் நடுங்கினர். அடுத்து என்ன நடக்கப் போகிறது? ஸ்ரீமத் பாகவதம் பகுதி இல் காண்போம்.


ஹரே கிருஷ்ணா அன்புடன் 

-கீதா வீரராகவன்.