tamilnadu epaper

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

இந்திய கிரிக்கெட் ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை டி20 தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் ஒரு சில நாள்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது எனவும், அவர் ஐசிசி நடத்தும் தொடர்களில் தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறார் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹார்திக் பாண்டியாவுக்கு இதற்கு முன்பு கொடுத்த முக்கியத்துவத்தை இந்திய கிரிக்கெட் தொடர்ந்து கொடுக்கக்கூடாது என நினைக்கிறேன். ஏனென்றால், நாம் பல ஆண்டுகளாக உலகக் கோப்பையை வெல்லாமல் இருக்கிறோம். அணியின் முதன்மையான ஆல்ரவுண்டர் என்றால் அவர் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால், ஹார்திக் பாண்டியா ஐசிசி நடத்தும் தொடர்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் தொடருக்குமிடையே நிறைய வித்தியாசம் உள்ளது. தனிநபருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துங்கள். தனிநபருக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தால், பெரிய அளவிலான தொடர்களை வெல்ல முடியாது என்றார்.