மோகன் வீட்டு வாசலில் ஒரு கூட்டம் வந்து நின்று கொண்டு நீ வாங்கின கடனை தராமல் இழுத்தடிக்கற, இதுதான் உனக்கு கடைசி சான்ஸ். இன்னும் ஒரு வாரம் டைம் தரேன் .அதற்குள் என் பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விடு. இல்லை என்றால் வீட்டை பூட்டி சாவி எடுத்துக்கொண்டு உன்னை தெருவில் நிக்க வைத்து விடுவேன் ஜாக்கிரதை!! என்று கந்துவடிக்காரன் முருகன், அடியாட்கள் கூட வந்து மிரட்டி கொண்டிருந்தான் .அந்த செய்தி மோகனின் தங்கை கீதாவின் காதிற்கு சென்றது. மனதிற்குள் வேதனைப்பட்டாள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்தாள்.மோகனும், அவன் மனைவி கமலாவும் ஊர் ஜனங்கள் முன்பு கத்தி விட்டு போனது பெரும் அவமானமாக இருந்தது. ஒன்னும் புரியாமல் குழம்பிப் போய் இருந்தார்கள். மோகனும் ,கமலாவும் இரண்டு வருடத்திற்கு முன் நடந்ததை நினைத்துப் பார்த்தார்கள் . மோகனும் அவன் தங்கை கீதாவும் ரொம்ப பாசமுள்ள அண்ணன் தங்கையாக இருந்தார்கள் .தங்கை கீதாவுக்காக எதையும் செய்யும் பாசக்கார அண்ணன் தான் மோகன் .ஆனால் விதி விளையாடியது மோகன் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் ஒடிந்து அவனது அப்பா இறந்துவிட்டார். அதனால் கீதாவுக்கு மோகன் மேல் கோபம் இருவரும் பேசிக் கொள்வதில்லை .அப்பா இறக்கும் முன் சொத்தை பிரித்து பாதி மோகன் பேரிலும், பாதி கீதாவின் பேரிலும் எழுதி வைத்திருந்தார். அந்த சொத்தை விற்று தான் மோகன் தனியாக துணிக்கடை ஒன்று திறந்தான். ஒருநாள் திடீரென்று கடையில் தீப்பிடித்தது. கடை முழுவதும் எரிந்து விட்டது. பெரும் நஷ்டம் ஏற்பட்டது .அதனால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. வட்டியும் கட்ட முடியாமல் கடன் தொல்லை அதிகமானது .கடன் காரர்கள் வீட்டு வாசலில் வந்து கத்திவிட்டு போகிறது வழக்கமாகிவிட்டது. இன்று கந்துவட்டிகாரன் முருகன் வேறு வந்து மிரட்டியதால் மிகவும் பயந்து போனார்கள். கடவுளே எங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டு என்று கடவுளை நோக்கி கும்பிட்டு பிரார்த்தனை செய்துவிட்டு அப்படியே தூங்கிவிட்டார்கள். இரண்டு நாள் கழித்து காலையில் ஒரு போன் வந்தது , ஹலோ!! என்றான் மோகன் .உன் கடன் பணம் எல்லாம் செட்டில்மெண்ட் ஆகிவிட்டது .வந்து நீ எழுதி கொடுத்த பத்திரத்தை வாங்கிக் கொண்டு போ என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்கள். மோகனுக்கு ஒரே ஆச்சரியம்!!! அதிசயமாக இருந்தது, யார் பணத்தை கட்டியிருப்பார்கள்? என்று குழம்பியபடி வீட்டிற்கு வெளியே வந்து நின்றான். வாசலில் பார்த்தால் அவள் தங்கை கீதா நின்று கொண்டிருந்தாள். அண்ணே, நான்தான் பணத்தை கட்டினேன். அதுவும் அப்பா எனக்காக கொடுத்த பணத்தை தான் என்று கூறினாள். நீ ஊர் காரங்க முன்னாடி மானம் போய் கஷ்டப்படுவதை கேட்டுக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை .அதான் இப்படி செய்தேன் என்றாள் .பாசத்துடன் தங்கையை அரவணைத்தான் மோகன். கண்களில் கண்ணீர் வழிந்தது, கண்ணீரை துடைத்துக்கொண்டு பார்க்கும் போது மோகனின் கண்களுக்கு அவள் தெய்வமாக தெரிந்தாள்.

எம். எல் .பிரபா
ஆதம்பாக்கம்
சென்னை 88