பொங்கல் போனஸ்!

பொங்கல் போனஸ்!



பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள். சந்தை களைகட்டியிருந்தது. விஸ்வா ஒரு உறுதியான முடிவோடு வீட்டை விட்டுப் புறப்பட்டான். ‘வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு விளைவித்தப் பொருட்களைக் கொண்டு வரும் விவசாயிகளிடம், இன்று ஒரு ரூபாயைக் கூட பேரம் பேசி குறைக்கக் கூடாது’ என்பதுதான் அவன் எடுத்த அந்த உன்னத முடிவு.

சந்தைக்குள் நுழைந்த விஸ்வா, காய்கறிகள், பூக்கள், மஞ்சள் கொத்து என ஒவ்வொன்றையும் வியாபாரிகள் சொன்ன விலையிலேயே வாங்கினான். எப்போதும் ஒரு பொருளுக்கு பேரம் பேசும் அவனுக்கு, இன்று மனதுக்குள் ஒரு நிறைவு. ஆனால், பையை நிரப்பிவிட்டு கடைசியாகப் பணப்பையைச் சரிபார்த்தபோது அவனுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது!


வழக்கமாகப் பொங்கல் சந்தைக்குக் கொண்டு வரும் தொகையை விட, இன்று பாதிக்கும் மேலான பணம் அப்படியே மிச்சமிருந்தது. ‘ஏதேனும் முக்கியமான பொருட்களை வாங்க மறந்துவிட்டோமோ?’ என்ற குழப்பத்தில் உடனே தன் மனைவி பிரியாவிற்குத் தொலைபேசியில் அழைத்தான்.

"பிரியா... லிஸ்ட்ல இருந்த எல்லாத்தையும் வாங்கிட்டேன். ஆனாலும் கைல பாதி காசு அப்படியே இருக்கு. ஏதும் முக்கியமானதை விட்டுட்டேனா? பேரம் பேசாம வாங்கச் சொன்னியேன்னு எல்லாத்தையும் சொன்ன விலைக்குத்தான் வாங்கினேன், அப்புறம் எப்படி காசு மிச்சமாச்சு?" என்று பதற்றமாகக் கேட்டான்.

மறுமுனையில் பிரியா மென்மையாகச் சிரித்தாள்.


 "நீங்க எதையும் மறக்கல விஸ்வா. நீங்க பேரம் பேசக்கூடாதுன்னு முடிவெடுத்துப் போனீங்க, ஆனா அங்க உங்களுக்கு நடந்தது வேற! இன்னைக்கு அங்க வந்திருக்கிறவங்க எல்லாரும் வெறும் வியாபாரிகள் இல்லை, நிஜமான விவசாயிகள். பொங்கல் அறுவடை முடிஞ்சு, தன் தோட்டத்து விளைச்சலை மக்களும் சந்தோஷமா கொண்டு போகட்டும்னு அவங்களே விலையைக் குறைச்சு வச்சிருக்காங்க. லாபத்தை விட, மத்தவங்க வயிறார சாப்பிடணும்னு நினைக்கிற உன்னதமான மனசு அவங்களோடது! அதுதாங்க விவசாயிங்க" என்றாள்.


அப்போதுதான் விஸ்வா சுற்றிலும் கவனித்தான். ஒவ்வொரு விவசாயியின் முகத்திலும் லாபத்தை விட, தன் உழைப்பு அடுத்தவர் வீட்டுப் பொங்கலாக மாறப்போகிறது என்ற ஆத்ம திருப்தி தெரிந்தது.

அருகில் ஒரு பாட்டி கூடை நிறைய வாழைப்பூக்களோடும், வாழைத் தண்டுகளோடும் அமர்ந்திருந்தார். விஸ்வா தயக்கத்துடன் சென்று, "இது என்ன விலை பாட்டி?" என்று கேட்டான்.

அந்தப் பாட்டி பாசத்துடன் சிரித்துக்கொண்டே, "பத்து ரூபாய் கொடுப்பா... இந்த ரெண்டு பூவையும் வச்சுக்கோ, கூடவே இந்தத் தண்டையும் எடுத்துட்டுப் போ. வீட்ல விசேஷத்துக்கு நல்லா சமைச்சு சாப்பிடுங்க" என்று அள்ளிப் போட்டார்.


விஸ்வாவிற்கு கண்கள் கலங்கியது. பத்து ரூபாய்க்கு இவ்வளவு பொருட்களா? அந்தப் பாட்டியிடம் ஆசி பெற்றவன், "ரொம்ப நன்றி பாட்டி, இனிய பொங்கல் வாழ்த்துகள்!" என்றான் நெகிழ்ச்சியோடு.

பணப்பையில் மிச்சமிருந்த அந்தப் பணம், வெறும் காகிதங்களாகத் தெரியவில்லை; அது விவசாயிகளின் பேருள்ளம் தனக்குக் கொடுத்த 'பொங்கல் போனஸ்' ஆகத் தெரிந்தது. மனமும் பையும் நிறைந்திருக்க, விஸ்வா மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கி நடந்தான்.


-----

ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%