சோமவார விரதம் மேற்கொள்ளும் நாளில் சிவாலயங்கள் தோறும் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். எனவே சோமவார விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் கோவிலுக்கு சென்று சங்காபிஷேகத்தை பார்த்து சிவனை தரிசிப்பது நல்லது.
கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியுடன் கார்த்திகை நட்சத்திரம் கூடும் தினம் `திருக்கார்த்திகை' திருநாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தந்து அருள்வதாக ஐதீகம். இதன் காரணமாகவே ஆலயங்களிலும், வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம். இந்நாளில் சிவனின் உடல் அதிக வெப்பத்தை தாங்கும் விதமாக, அதற்கு முன்னதாக வரும் திங்கட்கிழமைகளில் (சோம வாரம்) சிவனுக்கு, சங்காபிஷேக பூஜை நடத்தி குளிர்விக்கப்படுகிறது.
சங்காபிஷேகம் பார்த்தால் கஷ்டங்கள் விலகும், இந்த அபிஷேகத்தால் உலகில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும், தேவையான அளவுக்கு மழை பொழியும் என்பதும் நம்பிக்கை. சங்கு செல்வத்தின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வார்கள். எனவே, சங்காபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட வலம்புரி சங்கில் பாலை நிரப்பி, இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம், அதில் கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால், பிறவி பிணியை அறுக்கலாம் என்று பத்ம புராணம் கூறுகிறது. ஏழு பிறவிகளில் செய்த வினைகளில் இருந்து மீளலாம் என்று கந்த புராணமும் சொல்கிறது. இதன் காரணமாகவே பெரிய பெரிய சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.
கார்த்திகை சோம வார நாட்களில் 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கைகள் கொண்ட சங்குகளில் புனித நீரை நிரப்பி புஷ்பங்கள் வைப்பார்கள். ஒரு கும்பத்தில் சிவபெருமானை ஆவாகணம் செய்து வேத பாராயணங்கள் செய்து, பின்பு அந்த நீரைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்வார்கள். 1008 சங்குகளை வைத்து அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு 'சகஸ்ர சங்காபிஷேகம்' என்று பெயர். 108 சங்குகளை கொண்டு அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு `அஷ்டோத்ர சங்காபிஷேகம்' என்று பெயர்.
ஓம்கார சொரூபமான சங்கில் நாம் எந்த வேதா மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த வேதா மூர்த்தம் தனது அருள் நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடியதாகும். இதன் அடிப்படையிலேயே கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. சங்காபிஷேகத்தை பார்ப்பவர்களின் வாழ்வில் அவ்வப்போது எதிர்படும் கஷ்டங்கள் வந்த சுவடு தெரியாமல் விலகிச் செல்லும்.✍🏼🌹
Arunachalam