அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் மேற்கு வர்ஜீனியா தேசிய காவல்படையின் 2 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக சம்பவ இடத்தில் சந்தேக நபர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகைக்கு சற்று தொலைவில் நடந்த துப்பாக்கிச்சூடு பெரும் சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இது பற்றி அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மிகவும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். நமது மாபெரும் தேசிய காவல்படையையும், நமது ராணுவ மற்றும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளை கடவுள் ஆசீர்வதிப்பார்.
இவர்கள் உண்மையிலேயே சிறந்த மனிதர்கள். அமெரிக்காவின் அதிபராக நானும், உங்கள் அனைவருக்கும் ஆதரவாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பை மேலும் பலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, வாஷிங்டன் நகரத்துக்கு மேலும் 500 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இரண்டு தேசிய காவல் படை வீரர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதை எப்பிஐ இயக்குனர் காஷ் படேல் உறுதிப்படுத்தினார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர் ரஹ்மானுல்லா லகன்வால் என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே , ரஹ்மானுல்லா முதலில் அங்கிருந்த பெண் காவலரின் மார்பிலும், தலையிலும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்த மற்றொரு காவலரையும் நோக்கிச் சுட்டிருக்கிறார். இதனைக் கண்ட அருகில் இருந்த இன்னொரு காவலர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரைச் சுட்டு வீழ்த்தினார்.
இதில் ரஹ்மனுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 29 வயதான அவர், கடந்த 2021ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பான சூழலின்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என்று கூறப்படுகிறது.