அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா: அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ தகவல்
Sep 25 2025
32

வாஷிங்டன், செப். 23–
பரபரப்பான எச்1–பி விசா பிரச்சினைக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா என ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நம் நாட்டின் மீது 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்தார். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி இந்தியா– பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாக தொடர்ந்து அவர் கூறி வருகிறார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் வேலைபார்க்கும் இந்தியர்களுக்கு நெருக்கடியாக அமெரிக்காவின் எச்–1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தும் உத்தரவில் டிரம்ப் கையொப்பமிட்டார். இது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இந்தியர்களுக்கு பேரிடியாக விழுந்தது.
இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். ஐ.நா.வில் வருகிற 27-ந்தேதி அவர் உரை நிகழ்த்துவார். இதன் இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை அவர் சந்தித்து பேச உள்ளார்.
அந்த வகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவை, அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், வரி, விசா கட்டணம் உள்ளிட்டவை தொடர்பாகவும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் பேசினர்.
இந்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோவை சந்தித்ததில் மகிழ்ச்சி. தற்போதைய கவலைக்குரிய பல்வேறு இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். எங்களது உறவு தொடரும் என தெரிவித்திருந்தார்.
இந்தியா, அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடு. வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, மருந்துகள் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றில் இந்தியாவின் ஈடுபாட்டிற்கு பாராட்டுகள் என ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?