அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு நாடு திரும்பலாம்: எச்1பி விசா குறித்து அமெரிக்க அமைச்சர் விளக்கம்
வாஷிங்டன்: எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன்பின் எச்1பி விசாதாரர்கள் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு அண்மையில் உயர்த்தியது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு நிபுணர்கள் பணியில் சேருவதை தடுக்க மறைமுகமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி எச்1பி விசா பெறுவோரில் சுமார் 75% பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்த சூழலில் எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென தனது கொள்கையை மாற்றி உள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “அமெரிக்கர்களுக்கு வேலை வழங்கவே முன்னுரிமை அளிக்கிறேன். ஆனால் சிக்கலான மற்றும் உயர் தொழில்நுட்ப பணிகளுக்கு தேவையான திறமையான நிபுணர்கள் அமெரிக்காவில் இல்லை. எனவே உலகம் முழுவதும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வருவது அவசியம்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எச்1பி விசாவில் வெளிநாட்டு நிபுணர்களை அமெரிக்காவுக்கு வரவழைப்பது அவசியம் என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. அதிபர் ட்ரம்பின் தொலைநோக்கு திட்டத்தை விவரிக்க கடமைப்பட்டு உள்ளேன்.
எச்1பி விசாவில் வெளிநாட்டு நிபுணர்கள் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்கள் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கியிருந்து அமெரிக்க மக்களுக்கு சிறப்பு திறன்சார் பயிற்சிகளை வழங்குவார்கள். இதன்பிறகு வெளிநாட்டு நிபுணர்கள் அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பிஅனுப்பப்படுவார்கள். சிறப்பு திறன்சார் பயிற்சி பெற்ற அமெரிக்கர்கள், அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
செமி கண்டக்டர்கள் துறையில் அமெரிக்கா முன்னேற வேண்டும். அதற்கு வெளிநாட்டு நிபுணர்களின் தொழில் திறன் தேவைப்படுகிறது. கப்பல் கட்டுமானத்தில் மிக நீண்ட காலமாக அமெரிக்கா ஈடுபடவில்லை. இந்தத் துறையிலும் வெளிநாட்டு நிபுணர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. இதுதொடர்பான முக்கியமான துறைகளில் அமெரிக்க மக்களுக்கு வெளிநாட்டு நிபுணர்கள் சிறப்பு பயிற்சி அளிப்பார்கள். இவ்வாறு அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.