காசா, அக்.18 - காசாவின் மறுகட்டமைப்பு, எதிர்காலம் குறித்த விவாதங்களில் பாலஸ்தீன அரசியல் தலைவர்களின் பங்கு இருக்க வேண்டும். எனவே இஸ்ரேல் அடைத்து வைத்துள்ள பாலஸ்தீன அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இஸ்ரேல்-ஹமாசுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள தற்காலிக போர் நிறுத்தத்தின் அடுத்த கட்டமாக காசாவை நிர்வகிக்க சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இத்தனை ஆண்டு காலம் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கவும், அழிக்கவும் இஸ்ரேலுக்கு ஆயுத உதவியும் சர்வதேச ஆதரவையும் வழங்கிய மேற்குலக நாடுகளின் தலைவர்களின் ஆதிக்கம் இருக்கும் வகையில் தான் இக்குழு அமைக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் இந்த குழுவின் தலைவராக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காசா மறுகட்டமைப்பில் பாலஸ்தீன அரசியல் தலைவர்கள் இடம் பெற வேண்டும். அதற்காக இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இஸ்ரேலின் அரசியல் சிதைவுக் கொள்கை கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன அரசியல் தலைவர்களைக் குறிவைத்து படுகொலை செய்தது மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலமாக சிறையில் அடைத்து வைத்துள்ளது. இதன் மூலமாக பாலஸ்தீனத்தின் அரசியல் தளத்தை சிதைத்து யாசர் அராஃபத்துக்குப் பிறகு பாலஸ்தீன மக்களின் அரசியல் தலைவராக யாரும் உருவாகிவிடாமல் இஸ்ரேல் தடுத்துவிட்டது. ஃபதா (Fatah) மற்றும் பி.எல்.ஓ (PLO) அமைப்பின் முக்கியத் தலைவரான மர்வன் பார்குதி (Marwan Barghouti) பாலஸ்தீனத் தலைவர்களில் மிகவும் பிரபலமானவராகக் கருதப்படுகிறார். இவர் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கைதியாகச் சிறையில் உள்ளார். அதே போல மக்கள் விடுதலைக்கான பாலஸ்தீன முன்னணியின் (PFLP) தலைவர் அஹ்மத் சாஅதாத் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய அமைப்புகளின் அரசியல் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டோ அல்லது காசாவில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டோ வருகின்றனர். உதாரணமாக, ஹமாஸ் நிறுவனர் ஷேக் அஹ்மத் யாசின் 2004 இல் கொல்லப்பட்டார். சலே அல்-அரூரி, இஸ்மாயில் ஹனியே போன்ற முக்கியத் தலைவர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டனர். ஐ.நா. அவை எந்தவொரு பாலஸ்தீனக் குழுவையும் தனது தடைகள் பட்டியலில் வைக்கவில்லை. மாறாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மட்டுமே பாலஸ்தீனக் குழுக்களைத் தன்னிச்சையாகப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளன. இத்தகைய சூழலில் தான் மர்வன் பார்குதி, அஹ்மத் சாஅதாத் போன்ற அரசியல் தலைவர்களை இஸ்ரேல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களது அமைப்புகள் பாலஸ்தீனத்தின் எதிர்காலத்தை வெளிப்படையாக விவாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அந்தக் கருத்துக்களை காசா மறுகட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.