அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம்: 4 பேருக்கு பொருத்தப்பட்டது
சென்னை, செப்.21–
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்பு தானம் செய்யப்பட்டது. அவரது உறுப்புகள் 4 பேருக்கு பொருத்தப்பட்டது.
திருவள்ளூர் அரகம்குப்பத்தைச் சேர்ந்த 40 வயதான நபர், மீன் பிடி தொழிலைச் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் தனது இருசக்கர வாகனத்தில் எண்ணூரில் இருந்து வீட்டுக்கு வரும்போது வடசென்னை அனல் மின்நிலையம் இரண்டாம் நிலை அருகில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 16–ந் தேதி விபத்துக்கு உள்ளாகி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைகாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் 18–ந் தேதி அன்று இரவு மூளைச்சாவு அடைந்தார்.
உடல் உறுப்புகள் தானம்
இந்த ஆழ்ந்த துக்கத்திலும் அவரது குடும்பத்தினர் இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது சிறுநீரகங்கள், இதய வால்வு, கல்லீரல் மற்றும் தோல் ஆகியவை ஸ்டான்லி மருத்துவர்களால் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு வழங்கும் பொருட்டு எடுக்கப்பட்டது.
தானம் செய்யப்பட்ட உறுப்புகளில் ஒரு சிறுநீரகம் சென்னை ஸ்டான்லி மருத்துமனை நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை ராமசந்திரா மெடிக்கல் சென்டர் நோயாளிக்கும், கல்லீரல் ஜெம் மருத்துவமனை நோயாளிக்கும் , இதய வால்வுகள் பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனை நோயாளிக்கும், தமிழக அரசு விதிமுறைப்படி ஆணையத்தின் வழியாக பதிவு செய்து காத்திருக்கும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. தோல் அரசு ஸ்டான்லி மருத்துவமனை தோல் சேமிப்பு வங்கியில் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக சேமிக்கப்பட்டு உள்ளது.
ஆழ்ந்த சோகத்திலும் தானம் கொடுக்க முன்வந்த குடும்பத்தினருக்கு நன்றியும் ஆறுதலும் தெரிவிக்கப்பட்டது. இந்த மீளா துயர் நிலையிலும் மூளைசாவு அடைந்த தன் உறவினரின் உறுப்புகளை தானமாக கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட அவர்களின் கருணை கடவுளுக்கு நிகரானது.
தமிழக முதல்வரின் ஆணைப்படி அன்னாரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, மருத்துவமனை முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அதிகாரி, மற்றும் பணியாளர்கள் உறுப்புத் தானம் செய்தவரின் உடலுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, அவரின் உறவினர்களுக்கும் நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.