ரூ.14½கோடியில் சுரங்கப்பாதைகளை மேம்படுத்தும் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி தகவல்

ரூ.14½கோடியில் சுரங்கப்பாதைகளை மேம்படுத்தும் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை, செப்.21-–


சென்னையில் ரூ.14½கோடியில் சுரங்கப் பாதைகளை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


சென்னை மாநகராட்சி சார்பில் 293 பாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுரங்கப் பாதைகளை பொருத்தவரை 19 வாகன சுரங்கப் பாதைகளும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் 5 சுரங்கப் பாதைகளும் பராமரிக்கப்படுகிறது.


இந்த நிலையில், ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை, கெங்குரெட்டி சுரங்கப் பாதை, மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை, கொரட்டூர் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, ஹாரிங்டன் சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, ஜோன்ஸ் சாலை சுரங்கப்பாதை, பஜார் சாலை சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகிய 15 வாகன சுரங்கப் பாதைகள் ரூ.14 கோடியே 57 லட்சத்தில் மேம்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த சுரங்கப் பாதைகளின் சுவர்களில் நீர் கசியாவண்ணம் சீரமைத்தல், புதிய டீசல் மோட்டார்கள், மின் மோட்டார்கள், ஜெனரேட்டர் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. சுரங்கப் பாதைகளில் வர்ணங்கள் பூசப்பட்டு வரைபடங்கள் வரைந்து அவை மின் விளக்குகளால் அழகுபடுத்தும் பணி தொடங்கியுள்ளது.


அதேபோல, சுரங்கப்பாதைகளில் மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியதை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் தானியங்கி தடுப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கப் பாதைகள் சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் வாயிலாக கண்காணிக்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%