
-பாவலர் கருமலைத்தமிழாழன்
அறிவியலின் வளர்ச்சியாலே பெற்ற தென்ன
ஆராய்ந்து பார்த்தாலோ நன்மை யோடு
பறித்துகுழி நமக்குநாமே விழுதல் போன்று
பலவகையாய்த் தீமைகளும் வந்த திங்கே !
தறிகையால் நெய்ததுணி எந்தி ரத்தால்
தரம்மாறக் கைத்தறியோ வீழ்ந்த தின்று
பறித்துண்ட கனிதன்னைச் சாறாய் மாற்றிப்
பதப்படுத்திப் பருகியதால் கண்டோம் நோய்கள் !
மாட்டுவண்டிப் பயணமெல்லாம் பேருந் தாக
மாசாகிப் போனதுவே தூய காற்று
நாட்டிடையே நான்குவழிச் சாலை போட்டு
நட்டமரம் சாய்த்திட்டார் மழையோ போச்சு !
தீட்டிதிட்டம் கட்டுவித்த தொழிற்சா லையால்
தீக்கழிவு கலந்தாறு பாழ்ய்ப் போச்சு
ஊட்டமாக பயிர்வளர மருந்த டித்தே
ஊனமாகிப் போனார்கள் மனித ரெல்லாம் !
செயற்கைக்கோள் வானத்தில் பறக்க விட்டுச்
செத்தொழிய அணுக்குண்டை வெடிக்க வைத்தார்
இயற்கையாக வீசிவந்த காற்ற டைத்தே
இயந்திரத்தால் அறைகளினைச் குளிரச் செய்தார் !
இயங்குதற்கு விட்டமூச்சை மீண்டும் மீண்டும்
இழுக்கவைத்து உடலில்நோய் பெருக வைத்தார்
வியக்கவைக்கும் அறிவியலை ஆக்கத் திற்கு
வினையாற்றி வளங்களினை வளர்ப்போம் வாரீர் !
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?