அழகுப்பொய்

அழகுப்பொய்

அழகுப்பொய்.!*-------------*அதிகாலை இளங்குளிர் காற்று தலைகோதி காதோரம் குறுகுறுப்பேற்ற.. மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்த மதுமிதா...ஏதோ நினைவு தெளிந்தவளாக யூடர்ன் அடித்து வண்டியைத் திருப்பினாள். வழக்கமாக பூ..பழங்கள் வாங்கும் வண்டிப்பேட்டை சந்து .சாலையோர பூக்கடை அழகம்மாக்கிழவி.. பழக்கடை முஸ்தபா பாய் யாரையும் காணவில்லை.. அவர்கள் கடைபோட்டுக்கொள்ள அனுமதித்திருந்த வணிக வளாகத்தினரே கடை திறக்க வழியின்றி...முழங்கால் அளவு மழைநீரால் நிரம்பி இருந்தது வண்டிப்பேட்டை வீதி...வலுவிழந்த புயல் ஆக்ரோஷ வன்மையை நீர்திவலைகளாய் கொட்டித் தீர்த்து இற்றுப்போயிருந்தது. யோசனையோடு நின்றவளை.. எதிர்புற வீட்டு மாடிப்படிகளிலிருந்து கூவி அழைத்து..சத்தமாக சொன்னாள்.. பூக்காரம்மா.."பாப்போ...ரெண்டுநாளா அடாத மழ..தண்ணீ வடிஞ்ச பாடில்ல...நகராட்சி சாமிகளுக்கெல்லாம் வரம் கேட்டுக் கூவிக் கூவி ஓஞ்சுட்டோம்... ரெண்டு நாளா விக்காம பூ அழுகி நட்டம்..கந்து கட்டாம வேற நாராச ஏச்சு வாங்கி...பட்டினி ஒருபக்கம்னா... வம்பாடு ஒரு பக்கம்மா...நாளைக்கு எப்புடியும் தண்ணீ வடிஞ்சிடும் கண்ணு...மறக்காம வந்து எங்கிட்ட பூவும்..பாய்கிட்ட பழமும் வாங்கிக்கடா..கண்ணு.!". மதுமிதாவுக்கு ஏதோ உடைபடும் நெகிழ்வு.கைப்பையை திறந்து கொஞ்சம் பணம் தர முயன்றபோது.. "வேணாம்டா கண்ணு...வானம் வெளிவாங்கி பழையமாதிரி எல்லோரும் பாடுபட்டு பொழைக்கனும்னு உஞ்சாமிகிட்ட வேண்டிக்க தாயி..அதுபோதும்".. "என மறுத்துவிட்டாள் கிழவி. மதுமிதாவிற்கு மின்னலென ஒரு யோசனை தோன்றியது.தீர்மானத்தோடு வண்டியை கிளப்பிக்கொண்டு நகர்ந்தாள். அவள் யூடர்ட் அடித்து திரும்பிய இடத்தில் ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட வேலை நடந்து வருகிறது..ஒருவார கனமழையால் வேலை நிறுத்தப்பட்டிருக்க... பசித்த வயிற்றோடும்..சோர்ந்த கண்களோடும் வடமாநிலத் தொழிலாளர் குடும்பங்கள் அங்கே இருப்பதை பார்த்திருந்தாள்.வண்டியை அங்கே நிறுத்திய உடனேயே..ஒவ்வொருவராக எழுந்து வந்து தள்ளி நின்று தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர்.இவள் உதவ வந்தவளா.?ஏதேனும் உபத்திரம் கொடுப்பவளா.?என்கிற பரிதவிப்பை கண்டுகொண்டவள்.. "தம்பிகளா...நான் இங்க ஐடி கம்பெனியில வேலை பார்க்கறேன்...இரவு பணி முடிஞ்சி வரும்போது வண்டிப்பேட்டை முக்குல..பள்ளத்துல வண்டிச் சக்கரம் சிக்கி தடுமாறி விழுந்துட்டேன். அதுல என்னோட ஒத்தைக்காது கால் பவுன் கம்மல் மட்டும் கழன்டு மழைத் தண்ணீயில விழுந்துட்டுது.. தண்ணீய வடிகட்டி எடுத்துத்தர முடியுமா..உங்களால.. இருபத்தஞ்சாயிரம் ஆச்சே..போனா போகுதுன்னு விட்டுட முடியுமா.?"... வேலையில்லாமல் முடங்கிக்கிடக்கும் சிடுக்கை களையும் விதமாக "சரியக்கா..அங்க இருபதடி தூரம் வாய்க்கால் கிழிச்சி சாக்கடை கால்வாய்ல தண்ணீய வடிக்கனும்...டின் போட்டு அள்ளி ஊத்தனும்..ரெண்டாயிரம் கொடுத்துடுங்கக்கா.. கிட்ட நின்னு பொருள யாரும் எடுத்துடாம பார்த்துக்குங்க.. லோக்கல் ஆளுக எங்களுகிட்ட சண்டைக்கு வராம நீங்கதான் பார்த்து சமாளிச்சுக்கனும்.." மூச்சுவிடாமல் பேசிய முனிஷ் தலைச் சொறிந்தான். நான்கு ஐநூறு ரூபாய் தாள்களையும் ஒரு பக்க கம்மலையும் அவனிடம் தந்தவள்..தனியாக பெண்களிடம் இரண்டு ஐநூறுரூபாய் தாள்களை கொடுத்து "வேலைய தொடங்குறதுக்கு முன்னாடி புள்ளைகளுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிக்கொடுங்கம்மா..பாத்து பத்திரமா இருங்க..நீங்க வேலைய பார்த்துகிட்டே இருங்க..தண்ணீ வடிஞ்சு நகையைத் தேடுற நேரம் வந்திடுறேன்..நேத்து ஆறுமணிக்கு வீட்லயிருந்து கிளம்பினேன்.வீட்ல போட்டது போட்டபடியே கிடக்கும்...வர்றேன்பா.." உற்சாகமாக வண்டியை கிளப்பிக்கொண்டு போனாள் மதுமிதா.இன்னும் இரண்டு ..மூன்று மணி நேரத்தில் வண்டிப்பேட்டை சந்தில் மழைநீர் வடிக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய..பழக்கடை முஸ்தபா பாய்..பூக்காரம்மா உள்ளிட்ட நடைபாதை வியாபாரிகள்..கடை விரித்து விடுவார்கள்..கந்து வசூல்காரர்களின் ஏச்சுப்பேச்சுகள் கலகலப்பான உரையாடல்களாய் வட்டிபோட்டு வளர்ந்திருக்கும்... தினக்கூலி வடமாநில தொழிலாளர்கள் சப்பாத்தியும்..சால்னாவுமாக குடும்பத்தோடு உணவருந்தி மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் மதுமிதாவின் தோடு மட்டும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் அங்கே தோடே தொலையவில்லை.. மற்றொரு தோட்டோடு காத்திருக்கும் முனீஷூக்கும் அது தெரிய நியாயமில்லை. இவ்வளவு ஏன் அது தங்க தோடே இல்லை.மனிதம் வளர்க்க மகிழ்ச்சி துளிர்க்க அவதாரமெடுத்த சிறு துரும்பு அவ்வளவே.!*---++++-----+---+++-+-*


அரும்பூர்.க.குமாரகுரு,

மயிலாடுதுறை*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%