சீனிவாசன் தனக்கு சொந்தமான காலி மனையில் புதிய மாடி வீடு ஒன்றை கட்ட நினைத்து கட்டிடப் பொறியாளர் அசோகனை அணுகினார்.
நகராட்சி அலுவலகத்தில் புதிய வீடு கட்டுவதற்குரிய அனுமதியையும்,கட்டுமானத்திற்குரிய பொருட்கள் வாங்குவதில் இருந்து கட்டிடம் கட்டும் வேலை வரை அனைத்து பணிகளையும் பொறியாளர் அசோகனே பார்த்துக் கொண்டார்.
பூமி பூசை போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
சீனிவாசன் குடும்பத்தினர் மற்றும் தனக்கு வேண்டியவர்கள் என பதினைந்து நபர்கள் கலந்து கொண்டனர்.
கட்டிடம் கட்டும் போது அதற்கான தளவாட சாமான்கள் வைப்பதற்கு புதிதாக ஒரு தகரக் கொட்டகையும் போடப்பட்டிருந்தது.
பொறியாளரிடம் சீனிவாசன் கேட்டார்.வாட்ச்மேன் வேலைக்கு யாரை போடப் போகிறீர்கள்
என்றதும், அசோகன் சொன்னார்.வாட்ச்மேன்லாம் வேண்டாம் சார்.....!
பூமி பூசைக்கு வந்திருந்த சீனிவாசனின் நண்பர் ராமலிங்கம், என்ஜீனியர் சொல்றது சரிதான்...
இப்பல்லாம் யாரு வாட்ச்மென் வச்சுக்கிறாங்க...!
என்னா சொல்றீங்க மகாலிங்கம்?
சீனிவாசன், உங்களுக்கு தெரியாதா? இப்ப யாரு புதுசா வீடு கட்டும் போது வாட்ச்மென்லாம் வைக்கிறாங்க!
எல்லாம் காமிராதானே பார்த்துக்குது....
அப்படின்னா மனுசனுக்கு மனுசன்
நம்பிக்கை இல்லாமத்தான போச்சு! அப்படித்தான்....!
இங்கபாருங்க... சீனிவாசன்..வீடு கட்டும் மனுசன்,வீட்டுப் பாதுகாப்புக்கு கதவைப் போட்டான்.
கதவு மேல நம்பிக்கையில்லாம அதுக்கொரு தாழ்ப்பாளைப் போட்டான்...
தாழ்ப்பாளை நம்பாம பூட்டு ஒன்னு போட்டான். பூட்டையும் நம்பாம வாட்ச்மென் ஒருத்தனை வேலைக்கு வச்சான்... கொஞ்ச நாள்ல வாட்ச்மென் மேலையும் நம்பிக்கை இல்லாம போயிடுச்சு...!
அதனால்தான் வீட்டைச் சுற்றி காமிராவை வச்சிட்டான்....
இதுக்கெல்லாம் காரணம் மனுசன் மேல நம்பிக்கை குறைஞ்சது இருந்தாலும், விஞ்ஞான வளர்ச்சிதானே காரணம் ! என்றார் மகாலிங்கம் . அந்த விஞ்ஞானம்தான் இன்னைக்கு மனித இனத்துக்கே எதிரியால மாறி நிக்குது....!
அணுகுண்டை கண்டு பிடிச்சான்...அது உயிரினங்கள் எல்லாத்துக்குமே எதிரியாயிடுச்சு....
பூமியை க் கண்டுபுடிச்ச மனுசன்,தன்னை அறியாமலேயே ,விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி பல சாதனங்களை கண்டு புடிச்சு சாதனைப் படைச்சான்...அது எல்லாமே அவனை அறியாம அவனையே அழிச்சிகிட்டிருக்குன்னு அவனுக்கு ஏன் தெரியாமப் போச்சுன்னு தெரியல...! என்று வருத்தமாக சொன்னார் சீனிவாசன்...!
--------------------------------------
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.