
புதுடெல்லி,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றிருந்தது. செப்டம்பர் மாதம் இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களில் இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் பாகிஸ்தானும் ஒன்று.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் உறவு மேலும் மோசமாகி விட்டதால், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்று விளையாடுவதில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி, மார்ச்சில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் நடந்த போது இந்திய அணி பாதுகாப்பு அச்சம் காரணமாக அங்கு செல்ல மறுத்தது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
ஆசிய கோப்பை போட்டிக்கும் அது போன்ற சிக்கல் உருவானதால் அது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் டாக்காவில் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றார்.
இதில் பெரும்பாலான நிர்வாகிகள் போட்டியை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தியாவும் பொதுவான இடத்தில் போட்டியை நடத்த ஒப்புக் கொண்டது. இதையடுத்து இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது.
அங்குள்ள துபாய் மற்றும் அபுதாபியில் போட்டி நடைபெறும் என்று தெரிகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் மொசின் நக்வி தெரிவித்தார்.
இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெறும் என்று தெரிகிறது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட அட்டவணையில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஓமன் அணிகளும் இடம் பெற்று இருந்தன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?