ஆப்கானிஸ்தான் அதிரடி தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் பலி

ஆப்கானிஸ்தான் அதிரடி தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் பலி



காபூல், அக். 12–


பாகிஸ்தான் மீது தலிபான்கள் நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் பலியானதாக ஆப்கன் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


அண்டை நாடான பாகிஸ்தான், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுடன் மற்றொரு பக்கம் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் - இ – தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.


சமீபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில், ஆப்கனின் டி.டி.பி., அமைப்பு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் உட்பட பல வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து, பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய வான்வழி தாக்குதலால் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்லையில் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக தலிபான் படைகள் தாக்குதல் நடத்தினர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் 20 இடங்களில் தலிபான் ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் பல சோதனைச்சாவடிகள் அழிக்கப்பட்டன. 4 சோதனைச்சாவடிகளை ஆப்கன் ராணுவம் கைப்பற்றியது.


பாகிஸ்தான் ராணுவத்தின் டேங்க், கவச வாகனங்கள், துப்பாக்கிகளை தலிபான் வீரர்கள் கைப்பற்றினர். திடீர் தாக்குதலில் சிக்கிக்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர், ஆப்கன் வீரர்களிடம் சரண் அடைந்தனர்.


துராந்த் எல்லை பகுதியில் தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் நடந்தது பற்றி ஆப்கன் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆப்கன் தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் கூறுகையில், ஆப்கன் ராணுவத்தினரின் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 58 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.


ஆப்கன் தரப்பில் 9 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், 14 வீரர்கள் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் 20 சோதனை சாவடிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. தற்போது ஆப்கன் ராணுவத்தின் தாக்குதல் கத்தார் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் வேண்டுகோளை ஏற்று நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.


இது குறித்து தலிபான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எனாயத், ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக நள்ளிரவில் வெற்றிக்கரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. மீண்டும் ஆப்கானிஸ்தானின் எல்லைக்குள் அத்துமீறினால், எங்கள் பாதுகாப்பு படைகள் தங்கள் நாட்டை பாதுகாக்கத் தயாராக உள்ளன. மேலும் தக்க பதிலடி கொடுக்கும்’’ என்றார்.


குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாண சோதனைச்சாவடிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி உறுதி செய்தனர்.


இந்த மோதல்களின் போது பாகிஸ்தான் ஆயதங்கள் அழிக்கப்பட்டது என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.


ஆப்கான் விமானங்களை


வீழ்த்திய பாகிஸ்தான்


பாகிஸ்தான் பதிலடி கொடுத்து நடத்திய தாக்குதலில் ஆப்கானில் 3 விமானங்கள் (வெடிமருந்துகளை ஏற்றிச் சென்றவை) வீழ்த்தப்பட்டன. தீவிர சண்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆப்கான் தரப்பில் உயிர்சேதம் தெரியவில்லை.


எல்லையோர பகுதிகளில், வெவ்வேறு இடங்களில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் தொடர்ந்து மோதல் நடக்கிறது. இரு நாட்டு ராணுவத்தினரும் கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ளனர்.


இதற்கிடையில், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் எல்லைப் பதட்டங்கள் குறித்து கத்தார் கவலை தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்னைகளை தீர்க்கவும் கத்தார் அழைப்பு விடுத்தது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%