எகிப்தில் கார் விபத்து: கத்தார் அதிபர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் பலி
Oct 13 2025
10

கெய்ரோ, அக். 12–
எகிப்தில் நடந்த கார் விபத்தில் கத்தார் அதிபர் மாளிகையில் பணியாற்றி வந்த 3 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவது, காசா முனையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை குழுவில் அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார், துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள், தூதர்கள், ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தன. இந்த நாடுகள் ஹமாஸ் ஆயுதக்குழு, இஸ்ரேலிடம் நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி பணய கைதிகள் விடுதலை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், எகிப்தில் நேற்று நடைபெற்ற கார் விபத்தில் கத்தார் அதிபர் மாளிகையில் பணியாற்றி வந்த 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.
காசா அமைதி ஆலோசனை கூட்ட நடைபெறும் ஷார்ம் எல் ஷேக் நகரின் ரெட்சி ரெசாட் பகுதியில் நேற்று இந்த விபத்து நடைபெற்றது. விபத்தில் காயமடைந்த 2 அதிகாரிகளும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் விபத்தில் சிக்கிய கத்தார் அதிபர் மாளிகை அதிகாரிகள், நாளை நடைபெறும் காசா அமைதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களா? அல்லது ஹமாஸ் ஆயுதக்குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றவர்களா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?